262 கோடி ரூபாய் லாபம்; 17 ஆண்டுக்கு பிறகு லாபத்தை காட்டியது பி.எஸ்.என்.எல்.,
262 கோடி ரூபாய் லாபம்; 17 ஆண்டுக்கு பிறகு லாபத்தை காட்டியது பி.எஸ்.என்.எல்.,
ADDED : பிப் 14, 2025 10:00 PM

புதுடில்லி: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.262 கோடி லாபம் ஈட்டி உள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், தனியார் நிறுவனங்களின் போட்டியால் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனையடுத்து, நிறுவனத்தை லாப பாதைக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தது. பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அறிமுகம் செய்தது.
இதனையடுத்து, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், தற்போது, மொபைல் இணைப்பு, வீடுகளுக்கு பைபர் சேவை ஆகியவற்றில், 14 முதல் 18 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், மொத்த சந்தாதரர்களின் எண்ணிக்கையும் 8.4 கோடியில் இருந்து 9 கோடியாக அதிகரித்து உள்ளது.
இதனையடுத்து, 2024 - 25 நிதியாண்டின் 3வது காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் ஈட்டி உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார். இது நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2007ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் நிறுவனம் லாபத்தை ஈட்டி உள்ளது.
மேலும் நிதிச்செலவு உள்ளிட்ட மொத்த செலவினங்களை குறைத்ததால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.1,800 கோடி மிச்சமாகி உள்ளது.
தற்போது 4ஜி சேவையை அமல்படுத்துவதில் பிஎஸ்என்எல் மும்முரமாக உள்ளது. இதற்காக ஒரு லட்சம் டவர்கள் அமைக்கபட வேண்டிய நிலையில், 75 ஆயிரம் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன. அதில் 60 ஆயிரம் டவர்கள் செயல்பாட்டில் உள்ளன. எஞ்சியவற்றை வரும் ஜூன் மாதத்திற்குள் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.