பீஹாரில் 243 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டி; மாயாவதி
பீஹாரில் 243 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டி; மாயாவதி
ADDED : ஆக 31, 2025 09:08 PM

பாட்னா; பீஹார் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
பீஹாரில் உள்ள 243 தொகுதிகளில் வெகு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் பா.ஜ, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசார களத்தில் இறங்கி உள்ளன.
இந் நிலையில் பீஹார் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
பிஹாரில் வரவுள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வது, தேர்தலுக்கு தயாராவது குறித்து 2 நாட்களாக மூத்த தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் விவாதிக்கப்பட்டது.
கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் தலைவர்களின் வழிகாட்டுதலின் படி நடத்தப்படும். பிரசாரத்தைத் தயாரித்தல், வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்புப் பொறுப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த், மத்திய ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்பி ராம்ஜி கௌதம், பீஹார் மாநில பகுஜன் சமாஜ் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது,
பீஹார் ஒரு பெரிய மாநிலம், எனவே அதன் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு, அனைத்து சட்டசபை தொகுதிகளையும் மூன்று மண்டலங்களாக பிரித்து, மூத்த கட்சி உறுப்பினர்களுக்கு தனித்தனியாக பொறுப்புகளை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு மாயாவதி அந்த பதிவில் கூறி உள்ளார்.

