ADDED : பிப் 01, 2025 11:56 PM
மக்களுக்கான பட்ஜெட்!
மக்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவுக்கு பாராட்டுகள். இந்த பட்ஜெட் சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும்; இது, அனைவரது கனவுகளை நிறைவேற்றக் கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்.
-நரேந்திர மோடி,பிரதமர்
திவாலான அரசு!
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நம் பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால் இந்த அரசு, யோசனைகள் இல்லாமல் திவாலாகி விட்டது. துப்பாக்கிக் குண்டு காயத்துக்கு, பேண்டேஜை கொடுக்கிறது.
-ராகுல்,லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
ஆந்திரா புறக்கணிக்கப்பட்டது ஏன்?
பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், அம்மாநிலத்துக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது ஆச்சரியம் அளிக்கவில்லை என்றாலும், தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திரா, முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,
எந்த பலனும் இல்லை!
மத்திய பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை. பீஹார் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டால், மேற்கு வங்கத்துக்கும், மக்களுக்கும் எந்த பலனும் இல்லை.
-அபிஷேக் பானர்ஜி,பொதுச்செயலர், திரிணமுல் காங்.,
இதுதான் வளர்ந்த பாரதம்?
பட்ஜெட் தரவுகளை விட, மஹா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் தரவுகள்தான் முக்கியம். எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலைக்கூட அரசு வெளியிட மறுக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழப்பது தான், வளர்ந்த பாரதம் என்பதற்கான வரையறையா?
-அகிலேஷ் யாதவ்,தலைவர், சமாஜ்வாதி
நடுத்தர வர்க்கம் மகிழ்ச்சி!
அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக, மத்திய பட்ஜெட் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் மகிழ்ச்சி அடையும் வகையில், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் எப்போதும் பிரதமர் மோடியின் இதயத்தில் உள்ளனர்.
-அமித் ஷா,மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
ஏமாற்றம் அளிக்கிறது!
கோடீஸ்வரர்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்கு கொண்டு வந்து, சேமிக்கப்பட்ட பணத்தை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு செலவிட வேண்டும் என்ற என் பரிந்துரையை, பட்ஜெட்டில் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது ஏமாற்றத்தை அளிக்கிறது.
-அரவிந்த் கெஜ்ரிவால்,தேசிய ஒருங்கிணைப்பாளர்,ஆம் ஆத்மி