ADDED : செப் 17, 2024 05:00 PM

புதுடில்லி: வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்க அக்., 1 வரை உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
வன்முறை, கலவரம், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவோரின் வீடுகளை புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடவடிக்கை டில்லி ஷாஜகான்பூரில் துவங்கியது. பிறகு உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் இதுபோன்று புல்டோசர் வாயிலாக வீடுகள் இடிக்கப்படுவது தொடர்ந்தது. இதை தடுத்து நிறுத்தும்படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தவிர, பல தனிநபர்களும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்த போது, குற்ற வழக்குகளில் ஒருவர் சிக்கினாலே அவருடைய வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது சரியா. சட்ட விதிகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை இருக்க வேண்டும். இது தொடர்பாக, நாடு முழுதுக்கும் வழிமுறைகள் உருவாக்கப்படும் எனக்கூறி விசாரணையை இன்றைக்கு (செப்.,17) ஒத்திவைத்தது.
இது குறித்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலங்கள் உள்ள நாட்டில், குடும்பத்தில் ஒருவர் செய்த தவறுக்காக, அவர் வசித்த கட்டடங்கள் மீதோ அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு சொத்தை இடிப்பதற்கு, குற்றத்தில் ஈடுபட்டார் என்பதை மட்டும் கூற முடியாது. புல்டோசர் மூலம் இடிக்கப்படும் நடவடிக்கையை அக்.,1 வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். அதேநேரத்தில், சாலைகள், நீர்நிலை மற்றும் ரயில்வே ஆக்கிரமிப்புகளில் அகற்ற தடையில்லை எனவும் கூறினர்.