கொடுமைப்படுத்தியதை தற்கொலைக்கு துாண்டியதாக கூற முடியாது: சுப்ரீம் கோர்ட்
கொடுமைப்படுத்தியதை தற்கொலைக்கு துாண்டியதாக கூற முடியாது: சுப்ரீம் கோர்ட்
ADDED : டிச 13, 2024 01:31 AM
புதுடில்லி, கொடுமைபடுத்தப்பட்டதை, தற்கொலை செய்வதற்கு துாண்டியதாகக் கூற முடியாது. தற்கொலைக்கு துாண்டும் வகையில் நேரடியாக அல்லது மறைமுகமாக செயல்பட்ட ஆதாரங்கள் தேவை என, வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, 2009ல் திருமணம் நடந்தது. முதல் ஐந்து ஆண்டுகளில் குழந்தை இல்லாததால், கணவர் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2021ல் அந்த பெண் தற்கொலை செய்தார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் தந்தை வழக்கு தொடர்ந்தார். தன் மகளின் கணவர் மற்றும் பெற்றோர் கொடுமைப்படுத்தியதே, தற்கொலை முடிவு எடுக்கத் துாண்டியதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மறுப்பு
இது தொடர்பாக, இந்திய தண்டனை சட்டத்தின் - 498ஏ மற்றும் 306 எனப்படும் குடும்ப வன்முறை மற்றும் தற்கொலைக்கு துாண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க, விசாரணை நீதிமன்றம் மற்றும் குஜராத் நீதிமன்றங்கள் மறுத்தன. இதையடுத்து, கணவர் மற்றும் அவருடைய பெற்றோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி.வராலே அமர்வு விசாரித்தது. தன் உத்தரவில் அமர்வு கூறியுள்ளதாவது:
சட்டப்பிரிவு - 306 கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய ஆதாரங்கள் தேவை. கணவர் கொடுமைப்படுத்தியதே தற்கொலை செய்யத் துாண்டியது என்று கூறுவதை ஏற்க முடியாது.
தற்கொலை முடிவை எடுக்கும் அளவுக்கு துாண்டிய நடவடிக்கைகள் குறித்த நேரடி அல்லது மறைமுக ஆதாரங்கள் தேவை. அந்த காரணங்களே, தற்கொலைக்கு துாண்டியது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
திருமணமாகி, 12 ஆண்டுகளாக தங்கள் மீது கொடுமைபடுத்தியதாக எந்தப் புகாரும் இல்லை என்று கணவர் தரப்பில் கூறப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. புகார் கூறாததால், கொடுமைப்படுத்தவில்லை என்பதை எப்படி கூற முடியும்.
நடவடிக்கை
அதே நேரத்தில் அவர்கள் செய்த கொடுமைகளே, தற்கொலைக்கு துாண்டியது என்பதும் நிரூபிக்கப்படவில்லை. இதனால், இவர்கள் மீது, 306 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. அதே நேரத்தில், குடும்ப வன்முறை சட்டப் பிரிவான, 498ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

