பும்ராவுக்கு பாலி உம்ரிகர் விருது; சச்சினுக்கும் விருது வழங்கியது பி.சி.சி.ஐ.,
பும்ராவுக்கு பாலி உம்ரிகர் விருது; சச்சினுக்கும் விருது வழங்கியது பி.சி.சி.ஐ.,
ADDED : பிப் 01, 2025 09:45 PM

மும்பை: சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெற்றார்.
நமன் எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரைப் பதித்து வரும் பும்ரா, பி.சி.சி.ஐ.,யின் 2024ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதான, பாலி உம்ரிகர் விருதை மீண்டும் வென்றுள்ளார். இதற்கு முன்பாக, 2018-19, 2021-22ம் ஆண்டுகளில் இந்த விருதை வென்றுள்ளார்.
உலக கிரிக்கெட் அணிகளுக்கே பெரும் சவாலாக திகழ்ந்து வரும் பும்ரா, அண்மையில் 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதையும், ஆடவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.
அதேபோல, 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அந்தத் தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், 2024ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக (71) விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் திகழ்ந்தார். பி.சி.சி.ஐ.,யின் வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல, மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனை விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது. ஆடவர் கிரிக்கெட்டில் சிறந்த அறிமுக வீரருக்கான விருதை ஷர்பிராஷ் கானும், மகளிர் பிரிவில் ஆஷா ஷோபனாவும் பெற்றனர்.