பஸ்சில் தீ: மின்னணு ஓட்டு இயந்திரங்கள் எரிந்ததால் பரபரப்பு
பஸ்சில் தீ: மின்னணு ஓட்டு இயந்திரங்கள் எரிந்ததால் பரபரப்பு
ADDED : மே 08, 2024 01:55 PM

போபால்: ம.பி., மாநிலம் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்த நிகழ்வு நடந்தது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 94 தொகுதிகளில் 3ம் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று( மே 07) நடந்தது. ம.பி.,யில், 9 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டு எண்ணும் மையத்திற்கு அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பீட்டுல் மாவட்டத்தின் கோலா கிராமத்தில் பஸ் மூலம் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். பஸ்சில் 6 ஓட்டு இயந்திரங்கள் இருந்தன. வழியில் இரவு 11 மணியளவில், அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் இருந்தவர்கள் உடனடியாக சுதாரித்து வெளியேறியதால் காயமின்றி தப்பினர். 4 இயந்திரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக தலைமைத் தேர்தல் கமிஷனிடம் தகவல் தெரிவிக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் மறு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் அறிவிக்கும் எனவும் கூறினார்.

