மஹாராஷ்டிராவில் கோர விபத்து; பஸ் மோதியதில் 4 பேர் பலி; 25 பேர் படுகாயம்
மஹாராஷ்டிராவில் கோர விபத்து; பஸ் மோதியதில் 4 பேர் பலி; 25 பேர் படுகாயம்
ADDED : டிச 10, 2024 07:10 AM

மும்பை; மஹாராஷ்டிராவில் பஸ் மோதியதில் 4 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
குர்லா பகுதியில் இருந்து அந்தேரி பகுதிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில், பெண்கள், குழந்தைகள் என பலரும் இருந்தனர். அம்பேத்கர் நகர் என்ற பகுதிக்கு வந்த போது எதிர்பாராத விதமாக தறிகெட்டு ஓடியது. அதிவேகத்தில் சென்ற பஸ், அங்குள்ள நடைபாதைவாசிகள் மீது மோதியது.
அப்போதும், வேகம் குறையாமல் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளியது. பின்னர் அங்குள்ள குடியிருப்பு வளாகம் மீது மோதி நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீஸ் துணை கமிஷனர் கணேஷ் காவ்டே கூறியதாவது;
4 பேர் பலியாகிவிட்டனர். படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். டிரைவரை கைது செய்துள்ளோம். விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் விபத்துக்கு பஸ்சில் பிரேக் பெயிலியரே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. பிரேக் பிடிக்காததால் பீதி அடைந்த டிரைவர், ஆக்சிலேட்டரை மிதித்து விட்டதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது.

