இந்திய 'டிவி' தொடரில் முதன்முறையாக தோன்றுகிறார் தொழிலதிபர் பில் கேட்ஸ்
இந்திய 'டிவி' தொடரில் முதன்முறையாக தோன்றுகிறார் தொழிலதிபர் பில் கேட்ஸ்
ADDED : அக் 24, 2025 12:32 AM

புதுடில்லி: பிரபல அமெரிக்க கோடீஸ்வரரும், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் பிரபல ஹிந்தி தொடரில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த 2020ல், 'ஸ்டார் பிளஸ்' ஹிந்தி சேனலில் 'கியோங்கி சாஸ் பீ, கபி பஹு தீ' என்ற தொடர் ஒளிபரப்பானது.
'மாமியாரும் ஒரு காலத்தில் மருமகளே' என பொருள்படும் இந்த தொடரில், துளசி விரானி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடித்திருந்தார்.
முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெருமளவு வரவேற்பு பெற்றது. இதையடுத்து, பா.ஜ.,வில் சேர்ந்த ஸ்மிருதி இரானி, தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.
கடந்த லோக்சபா தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில், 'கியோங்கி சாஸ் பீ, கபிபஹு தீ' தொடரின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த தொடரில், பில் கேட்ஸ் நடிப்பது உறுதியாகிஉள்ளது.
இந்த தொடரின் 'ப்ரோமோ' எனப்படும் முன்னோட்டம் நேற்று வெளியானது. அதில், ஸ்மிருதி இரானி, 'லேப்டாப்' வழியாக 'வீடியோ' அழைப்பில் பில் கேட்ஸ் உடன் பேசுவது போல் காட்சி வெளியானது.
'ஜெய் கிருஷ்ணா... நீங்கள் அமெரிக்காவில் இருந்து எங்கள் குடும்பத்தினருடன் இணைவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது' என ஸ்மிருதி இரானி கூற, பதிலுக்கு பில் கேட்ஸ், 'தேங்க் யூ துளசி ஜி' என கூறுகிறார்.
இதன் மூலம் இந்திய 'டிவி' தொடரில் முதன் முறையாக பில் கேட்ஸ் தோன்றியுள்ளார்.
பெண்கள் ஆரோக்கியம் இந்த தொடரில், மூன்று அத்தியாயங்களில் தோன்றும் பில் கேட்ஸ், தன் தொண்டு நிறுவனத்தின் பணிகளின் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன், அமெரிக்காவின், 'தி பிக் பேங் தியரி' என்னும் 'டிவி' தொடரில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார்.

