ADDED : ஜன 01, 2025 10:04 PM
புதுடில்லி:வடமேற்கு டில்லி கல்யாண் விஹாரில், மின்விசிறியில் தூக்கிட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். மனைவி மற்றும் மாமியார் துன்புறுத்தலால் அவர் இந்த முடிவை எடுத்ததாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
கல்யாண் விஹாரில் வசித்தவர் புனீத் குரானா, 40. தொழிலதிபர். டிச. 31ம் தேதி மாலை 4:00 மணிக்கு வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
மனைவி மற்றும் மாமியாரின் துன்புறுத்தலால் தன் மகன் இந்த முடிவை எடுத்துள்ளதாக புனீத்தின் தந்தை, திரிலோக் நாத் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். மேலும், தன் மகனின் மொபைல் போன் மற்றும் இதர ஆதாரங்களை வடமேற்கு மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் பீஷம் சிங்கிடம் ஒப்படைத்தார். விசாரணை நடக்கிறது.

