ADDED : டிச 05, 2024 02:24 AM
புதுடில்லி, வங்கிகளில் கடன் வாங்கி, 770 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், தொழிலதிபர் அனில் ஜிண்டாலுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பரிதாபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.ஆர்.எஸ்., குழுமம், தங்கம், ஆபரண நகை, சினிமா தியேட்டர்கள், ரியல் எஸ்டேட் என, பல தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் போலி ஆவணங்களை கொடுத்து, பல வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி, திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளது. மேலும், தொழில் வளர்ச்சிக்காக பெறப்பட்ட கடன்களை அதற்காக பயன்படுத்தாமல் ஏமாற்றியதாக புகார்கள் எழுந்தன.
இவை தொடர்பாக, பல விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில், அந்த குழுமத்தின் தலைவர் அனில் ஜிண்டால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
'இந்த வழக்கில், கடந்த ஆறரை ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார். ஆனால், வழக்கின் விசாரணை மிகவும் மெதுவாக நடந்து வருகிறது. அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே கிடைக்கும். அதனால், அவர் ஜாமினில் விடுவிக்கப்படுகிறார்' என, உத்தரவில் அமர்வு கூறியுள்ளது.
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; சொத்துக்களை விற்கக்கூடாது. அவருடைய நடமாட்டத்தை கண்காணிக்க, விசாரணை அதிகாரியிடம் மொபைல் போன் எண்ணை வழங்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.