ADDED : மார் 30, 2025 04:07 AM

புதுடில்லி: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் சுப்ரீம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். இந்நிறுவனத்தின் நிர்வாகிகளாக லலித் தேக்சந்தானி மற்றும் சிலர் இருந்தனர்.
இந்நிறுவனம் நவி மும்பையில் உள்ள தலோஜாவில் வீட்டு வசதி திட்டத்திற்காக, 1,700-க்கும் மேற்பட்ட வீடு வாங்குபவர்களிடமிருந்து 400 கோடி ரூபாய் நிதி திரட்டியது.
திட்டத்தை குறித்த காலத்திற்குள் முடிக்கவில்லை; பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து, அமலாக்கத்துறை விசாரணை செய்தது.
விசாரணையில், வீடு வாங்குவதற்காக பொது மக்களிடம் திரட்டிய பணத்தை, நிறுவனத்தின் இயக்குநர்களான லலித் தேக்சந்தானி மற்றும் சிலர் பயன்படுத்தி, தங்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்தது தெரிய வந்தது.
இதையடுத்து, தேக்சந்தானியை கடந்த ஆண்டு மார்ச்சில் அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்நிலையில், தேக்சந்தானி மற்றும் நிறுவனத்தின் பெயரில் துபாயில் உள்ள வில்லா, வீடுகள், மும்பை மற்றும் புனேவில் உள்ள நிலங்கள் என, 44 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை நேற்று அறிவித்தது.