ADDED : ஜன 21, 2025 07:15 AM

மைசூரு: பட்டப்பகலில் காரில் சென்று கொண்டிருந்த தொழிலதிபரை, நான்கு முகமூடி கொள்ளையர்கள் வழிமறித்து 1.50 லட்சம் ரூபாயையும், காரையும் வழிப்பறி செய்தனர்.
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஷபி. இவர் நேற்று காலையில் மைசூரு ஜெயபுரா பேரூராட்சியில் உள்ள ஹாரேஹள்ளி என்ற பகுதியில், தன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை, இரண்டு கார்கள் பின் தொடர்ந்து வந்தன.
இதை நோட்டமிட்ட ஷபி, காரை வேகமாக ஓட்டும்படி, டிரைவரிடம் கூறி உள்ளார். டிரைவரும் காரை வேகமாக ஓட்டி உள்ளார். இருப்பினும், ஒரு கட்டத்தில் இரண்டு கார்களும், ஷபியின் காரை முந்திச் சென்று, சாலையில் நடுவே நின்றன.
காரில் இருந்து இறங்கிய நான்கு முகமூடி கொள்ளையர்களும், ஷபியின் காரின் அருகே வந்து கீழே இறங்கும்படி கூறி உள்ளனர். இதை பார்த்து பயந்து போனவர், காரின் கதவை அடைப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அதற்குள், நான்கு கொள்ளையர்களும், காரிலிருந்த ஷபி, அவரது டிரைவரை வெளியே இழுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின், காரில் இருந்த 1.50 லட்சம் ரூபாயுடன் காரை கொள்ளையர்கள் ஓட்டிச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சினிமா பாணியில் வழிப்பறி நடந்துள்ளது. இந்த காரின் பின்னால் வந்த காரில் உள்ள கேமராவில் வீடியோவாக பதிவாகி இருந்தது. இந்த வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது.
சம்பவம் குறித்து விசாரித்த எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் கூறியதாவது:
மைசூரை சுற்றியுள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொள்ளையர்களை பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளா, வயநாடு எஸ்.பி.,க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரில் இருந்த தொகை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. வழிப்பறி கொள்ளையர்கள், டில்லியில் பதிவு செய்யப்பட்ட காரை பயன்படுத்தி உள்ளனர். விசாரணையில் மேலும் பல உண்மைகள் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

