ADDED : மே 08, 2025 10:51 PM
சதர் பஜார்:'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு ஆதரவாக நேற்று டில்லியில் வர்த்தகர்கள் தேசியக்கொடி ஏந்தி வெற்றி பேரணி நடத்தினர். பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஹிந்து சுற்றுலா பயணியரை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக குரல் ஒலித்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு புதன்கிழமை நள்ளிரவு 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
வெற்றிகரமாக 9 பயங்கரவாதிகளின் இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு நாடு முழுதும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
ராணுவ நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் சதர் பஜார், கன்னாட் பிளேஸைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான வர்த்தகர்கள் நேற்று பெரிய தேசியக்கொடியை ஏந்தி பேரணி நடத்தினர்.
குதுப் சாலை சவுக்கில் இருந்து நேற்று காலை இந்த பேரணி துவங்கியது. பாகிஸ்தானுக்கு எதிராகவும் நம் ராணுவத்துக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர்.
சதர் பஜார் வர்த்தக சங்க கூட்டமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது கூட்டமைப்பின் தலைவர் பரம்ஜித் சிங் பம்மா பேசுகையில், “ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை பாகிஸ்தானில் பயங்கரவாத வலையமைப்புகள் தொடர்ந்து இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச சமூகம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்,” என்றார்.
இதேபோல் கன்னாட் பிளேஸிலும் வர்த்தகர்கள் பேரணி நடத்தினர்.