ADDED : பிப் 01, 2024 06:48 AM

வார இறுதியில் சொகுசு விடுதிகள், மால், ஷாப்பிங் என, சுற்றி போரடித்து விட்டதா. மரம், மலை, குன்று, இயற்கை காட்சிகளை ரசித்து, விலங்குகள், பறவைகளுடன் உல்லாசமாக பொழுது போக்க வேண்டுமா? அப்படியென்றால் கபினிக்கு வாருங்கள்.
பெங்களூரின் மக்கள், எப்போதும் பரபரப்பான வாழ்க்கை வாழ்கின்றனர். ஓய்வின்றி பணியாற்றி அவதிப்படுகின்றனர்.
வார இறுதி நாட்களில், சொகுசு விடுதிகளுக்கு செல்வது, மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்வது என, பொழுதை போக்குகின்றனர். வாரந்தோறும் ஒரே இடத்தை சுற்றி பார்த்து அலுப்படைந்துள்ளனர். மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
பச்சை பசேலென்ற மரங்கள், செடி, கொடிகள், மனதை மயக்கும் இயற்கை காட்சிகளை ரசிக்கவும், விலங்குகள், பறவைகளுடன் பொழுதை கழிக்க விரும்பாதோர், இருக்க முடியாது. இத்தகைய அனுபவத்தை பெற விரும்பும் மக்கள், வார இறுதி நாட்களில் கபினிக்கு சுற்றுலா வரலாம்.
ஒரு முறை இங்கு வந்து சென்றால், மனதும், உடலும் புத்துணர்ச்சி பெறும். இப்போதுதான் பிறந்ததை போன்ற உணர்வு ஏற்படும்.
பெங்களூரின் பரபரப்பான வாழ்க்கை, ஓட்டம், நெருக்கடியை மறந்து மைசூரின், எச்.டி.கோட்டேவில் உள்ள கபினிக்கு வந்தால் போதும். சொர்க்கத்துக்கு வந்ததை போன்று தோண்டும்.
கண் செல்லும் இடங்களில் எல்லாம் பசுமை, சுதந்திரமாக திரியும் சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற விலங்குகள், ஒற்றுமைக்கு உதாரணம் காண்பித்தபடி, கூட்டமாக தென்படும் பறவைகள் என, அடுக்கி கொண்டே போகலாம்.
பெங்களூரில் இருந்து, 220 கி.மீ., தொலைவில் கபினி அணை உள்ளது. சாலை வழியாக சென்றால், ஐந்து மணி நேரம் தேவைப்படும். மைசூரில் இருந்து வெறும் 60 கி.மீ., தொலைவில் உள்ளது.
கபினிக்கு அருகிலேயே ரயில் நிலையம் உள்ளது. பெங்களூரில் இருந்து, மைசூரு ரயில் நிலையத்தில் வந்திறங்கி, டவுன் பஸ், டாக்சியில் கபனிக்கு செல்லலாம்.
ஒரு நாளாவது, இங்கேயே தங்கும்படி திட்டமிட்டு செல்ல வேண்டும். கபினியில் ஏராளமான ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள் உள்ளன. கபினி ரிவர் லாட்ஜ், தி செராய் சொகுசு விடுதிகள், எவால்வ் பேக் விடுதிகள், தி பைசன் சொகுசு விடுதி, ரெட் அர்த் உட்பட, பல சொகுசு விடுதிகள் பிரபலமானவை.
கபினிக்கு 35 கி.மீ., தொலைவில், நாகரஹொளே தேசிய பூங்கா உள்ளது. கபினிக்கு சுற்றுலா செல்வோர், நாகரஹொளேவுக்கு செல்லலாம்- நமது நிருபர் -.