ADDED : செப் 20, 2024 05:50 AM
பெங்களூரு: தட்சிண கன்னடா உள்ளாட்சி அமைப்புகளின் எம்.எல்.சி., பதவிக்கு, அக்., 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
தட்சிண கன்னடா மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பா.ஜ.,வின் கோட்டா சீனிவாச பூஜாரி. இவர், லோக்சபா தேர்தலில், உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி.,யாக வெற்றி பெற்றார். இதனால், எம்.எல்.சி., பதவியை ஜூன் 15ம் தேதி ராஜினாமா செய்தார்.
காலியான அந்த தொகுதிக்கு, மத்திய தேர்தல் கமிஷன், நேற்று இடைத்தேர்தல் அறிவித்தது. இதன்படி, வரும் 26ம் தேதி, வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. மனு தாக்கலுக்கு, அக்., 3ம் தேதி கடைசி நாள்.
அக்., 4ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. மனுக்களை திரும்ப பெறுவதற்கு, அக்., 7ம் தேதி கடைசி நாள். அக்., 21ம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அக்., 24ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலுக்கு, உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள் ஓட்டு போடுவதற்கு தகுதி பெற்றவர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோரின் பதவி காலம், 2028 ஜனவரி 5ம் தேதி வரை இருக்கும்.