பெங்., ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி., பதவிக்கு இன்று இடைத்தேர்தல்
பெங்., ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி., பதவிக்கு இன்று இடைத்தேர்தல்
ADDED : பிப் 16, 2024 07:20 AM

பெங்களூரு: பெங்களூரு ஆசிரியர் தொகுதியின் எம்.எல்.சி., பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது.
பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்.எல்.சி.,யாக இருந்தவர் பா.ஜ.,வின் புட்டண்ணா. கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் ஐக்கியமானார். எம்.எல்.சி., பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜாஜிநகர் தொகுதியில், காங்., வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்தார்.
காலியாக இருக்கும் இந்த பதவிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக புட்டண்ணா; பா.ஜ., ஆதரவு ம.ஜ.த., வேட்பாளராக ரங்கநாத் உட்பட, 9 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
பெங்களூரு, பெங்களூரு ரூரல், ராம்நகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, வாக்காளர் பட்டியலில் இருக்கும் ஆசிரியர்கள் ஓட்டு போட தகுதி பெற்றவர்கள் ஆவர். 7,141 ஆண்கள், 12,030 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 19,172 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர்.
இன்று காலை 8:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக, பெங்களூரில் 43 ஓட்டுப்பதிவு மையங்கள் உட்பட மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து, 70 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடக்கிறது. இதற்காக இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளன.
அதில், அனைத்து வேட்பாளர்களின் விபரம் இருக்கும். வாக்காளர்கள், தங்களுக்கு விருப்பமானவருக்கு முத்திரை குத்தலாம். பின், ஓட்டு பெட்டியில் போட வேண்டும்.
இன்று பதிவாகும் ஓட்டுகள் 20ம் தேதி எண்ணப்படுகின்றன. ஓட்டுப்பதிவு மையங்களை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.