மாநகராட்சியில் 12 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு நவ., 30ல் ஓட்டுப்பதிவு; டிச., 3ல் முடிவு
மாநகராட்சியில் 12 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு நவ., 30ல் ஓட்டுப்பதிவு; டிச., 3ல் முடிவு
ADDED : அக் 29, 2025 02:41 AM
புதுடில்லி: 'டில்லி மாநகராட்சியில் காலியாக உள்ள, 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல், நவம்பர் 30ம் தேதி நடக்கும்' என டில்லி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு:
டில்லி மாநகராட்சியில் முண்ட்கா, ஷாலிமார் பாக் - -பி, அசோக் விஹார், சாந்தினி சவுக், சாந்தினி மஹால், துவாரகா - -பி, டிச்சான் கலன், நரைனா, சங்கம் விஹார் - -ஏ, தக் ஷின்புரி, கிரேட்டர் கைலாஷ் மற்றும் வினோத் நகர் ஆகிய வார்டுகளில் கவுன்சிலர் பதவி காலியாக உள்ளன.
இந்த, 12 வார்டுகளுக்கும் இடைத்தேர்தல் நவ. 30ம் தேதி நடத்தப்படும். வேட்புமனு தாக்கல் நவ. 3ம் தேதி துவங்கி 10ம் தேதி நிறைவடையும். அறிவிக்கப்படுள்ள தேதிகளில் காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு பரிசீலனை நவ., 12ல் நடக்கும். மனுவை நவ., 15ம் தேதி வாபஸ் பெறலாம். வேட்பாளர்கள் வைப்புத் தொகையாக 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். பட்டியல் இன வேட்பாளர்கள் 2,500 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
தேர்தல் செலவு உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவ., 30ல் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும். ஓட்டுக்கள் டிச., 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 12 வார்டுகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இது, டிச. 10ம் தேதி வரை அமலில் இருக்கும். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஷாலிமார் பாக்- - பி வார்டு கவுன்சிலராக இருந்த ரேகா குப்தா, பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராகவும் பதவி வகிக்கிறார். துவாரகா- - பி வார்டு கவுன்சிலராக இருந்த கமல்ஜித் செராவத், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மேற்கு டில்லி எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். அதேபோல, இதர வார்டுகளிலும் பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் டில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இடைத்தேர்தல் நடக்கும் 12 வார்டுகளில், பா.ஜ.,விடம் ஒன்பது வார்டுகள் இருந்தன.
டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு சாதகமாகத்தான் இருக்கும். கடந்த எட்டு மாதங்களில் பா.ஜ.,வின் மூன்று இயந்திர அரசு செய்த வளர்ச்சிப் பணிகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்,”என்றார்.
ஆம் ஆத்மியும், 'மாநகராட்சி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகவே இருக்கிறோம்' என கூறியுள்ளது.

