ADDED : நவ 27, 2024 02:21 AM

புதுடில்லி,ந்திராவில் மூன்று; ஒடிசா, ஹரியானா மற்றும் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள தலா ஒரு ராஜ்யசபா இடங்களுக்கு, டிச., 20ல் இடைத்தேர்தல் நடக்கும் என, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி டிச., 10 என்றும், அதை வாபஸ் பெற கடைசி தேதி டிச., 13 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்., தோல்வி அடைந்தது.
இதனால், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்களாக இருந்த வெங்கடரமண ராவ் மோபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ், ரியாகா கிருஷ்ணய்யா ஆகியோர் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். இந்த மூன்று இடங்களுக்கும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் இந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்தது.
அதிருப்தி அடைந்த சுஜீத் குமார், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்ததால் இடைத் தேர்தல் நடக்கிறது.
மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரசின் ஜவர் சிர்கார், ஹரியானாவில் ஆளும் பா.ஜ.,வைச் சேர்ந்த கிரிஷன் லால் பன்வார் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, இந்த இரண்டு இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் ஆளுங் கட்சிகளுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால் அவை வெற்றி பெற வாய்ப்புள்ளது.