பசுமை மின்சார வழித்தட 3ம் கட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பசுமை மின்சார வழித்தட 3ம் கட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:26 PM
புதுடில்லி: நாட்டில் பசுமை மின்சார உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், 1.86 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பசுமை எரிசக்தி வழித்தடம் 3ம் கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையிலான மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 135 ஜிகாவாட்டை மின் தொகுப்பை கொண்டு செல்ல இத்திட்டம் உதவும். 1.86 லட்சம் கோடி ரூபாய் திட்டச் செலவில், மாநிலங்களுக்கு இடையிலான மின் பகிர்மான கட்டமைப்புக்கு 1.36 லட்சம் கோடி ரூபாயும், 50,000 கோடி ரூபாய், 50 ஜிகாவாட் மணி திறன் கொண்ட ‘பேட்டரி மின்சார சேமிப்பு அமைப்புகளுக்கும்’ ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் நிதியுதவி 54,082 கோடி ரூபாயாக இருக்கும். இத்திட்டம் 2032 – 33 நிதியாண்டுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் நிலையற்ற உற்பத்தி, மின் தொகுப்பு நெரிசல் மற்றும் உச்சநேர மின் கட்டுப்பாடு போன்ற சவால்களை சமாளிக்க பேட்டரி மின்சார அமைப்பு உதவும். மேலும், சூரிய மின்சாரம் இல்லாத நேரங்களில், ‘பேட்டரி மின்சார சேமிப்பு அமைப்பு’ மின் தேவையை பூர்த்தி செய்யும்.
அத்துடன், நாட்டின் மரபு சாரா மின்சக்தி நிறுவுதிறன் வரும் 2035க்குள் 900 ஜிகாவாட்டாக உயரவும், மின் தொகுப்பு, பராமரிப்பு மேலாண்மையில் அதிக அளவில் வேலைவாய்பை உருவாக்கவும் வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
