கோல்கட்டா ஜூனியர் டாக்டர்கள் மீண்டும் போராட்டம் துவக்கினர்
கோல்கட்டா ஜூனியர் டாக்டர்கள் மீண்டும் போராட்டம் துவக்கினர்
ADDED : அக் 02, 2024 01:31 AM
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி ஜூனியர் டாக்டர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று மீண்டும் துவக்கியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு, கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டார்.
நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் நீதி கேட்டு, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, அவர்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாநில அரசு உறுதியளித்ததால், அவசரகாலப் பிரிவில் மட்டும் கடந்த மாதம் 21ம் தேதி முதல் பணியாற்றி வந்தனர்.
ஆனால், மேற்கு வங்கத்தின் சில மருத்துவமனைகளில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், ஜூனியர் டாக்டர்களை அதிருப்திக்குள்ளாக்கியது.
எனவே, டாக்டர்களின் பாதுகாப்பு, சுகாதார செயலரை நீக்குவது, பயிற்சி பெண் டாக்டர் கொலை வழக்கில் விரைந்து நீதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய ஜூனியர் டாக்டர்கள், நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
இதற்கிடையே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோல்கட்டாவில் உள்ள கல்லுாரி சதுக்கத்தில் இருந்து தர்மதாலா பகுதி வரை இன்று பேரணி செல்லவும் ஜூனியர் டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.