'குரங்கு', ' மென்டல்' என விமர்சிக்கப்பட்ட பெண் பாரா ஒலிம்பிக்கில் சாதனை
'குரங்கு', ' மென்டல்' என விமர்சிக்கப்பட்ட பெண் பாரா ஒலிம்பிக்கில் சாதனை
ADDED : செப் 04, 2024 04:58 PM

புதுடில்லி: பிறக்கும் போதே, ' குரங்கு', ' மென்டல்' என உறவினர்களின் விமர்சனத்திற்கு உள்ளான தீப்தி ஜிவன்ஜி, பாரிசில் நடக்கும் பாரா ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளதுடன் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
ஒருவர் நம்பிக்கையுடன் முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை பாரிசில் நடக்கும் பாரா ஒலிம்பிக் தொடர் உலகத்திற்கு எடுத்துக்காட்டி வருகிறது. தடகள வீராங்கனைகள், பல்வேறு தடைகளை தாண்டி ஏராளமான சாதனைகளை படைத்து வருகின்றனர். அதில் ஒருவர் இந்தியாவின் ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த தீப்தி ஜிவன்ஜி.
பிறந்தது முதல் பல்வேறு தடைகளை சந்தித்த அவர், அதில் மனம் தளராமல் போராடி, 400 மீ., ஓட்டத்தில் 55.82 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 21வது வெண்கலம் ஆகும். இதற்கு முன்னர் ஜப்பானில் நடந்த உலக தடகள பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து இருந்தார். பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவருக்கு நாடு முழுவதும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இவரின் சாதனை குறித்தும், இளம் வயதில்நேர்ந்த அவமானங்கள் குறித்தும் அவரின் தந்தை ஜீவன்ஜி யாத்கிரி, தாயார் ஜீவன்ஜி தனலட்சுமி ஆங்கில நாளேடுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, யாத்கிரி கூறியதாவது: சூரிய கிரகணத்தின் போது, மாற்றுத்திறனாளியாகவே தீப்தி ஜிவன்ஜி பிறந்தார். அப்போது, உதடு மற்றும் மூக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால், அவரை பார்க்கும் கிராமமக்கள் மற்றும் உறவினர்களும், தீப்தியை மனநிலை பாதித்தவர், குரங்கு என திட்டினர். அவரை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடும்படி கூறினர். இன்று அவரின் வெற்றியை பார்க்கும் போது, அவர் நாட்டின் சிறப்பு மகள் என்பதை நிரூபித்து உள்ளார். இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாள். அவர் எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை அளித்துள்ளார். இந்த பதக்கம் மூலம் அது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
தனலட்சுமி கூறியதாவது: தீப்தி ஜிவன்ஜி அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். கிராமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் சிலர் கேலி செய்யும்போது வீட்டில் வந்து அழுவார். அவரை சமாதானப்படுத்த அவருக்கு பிடித்தமானவற்றை செய்து கொடுத்து சமாதானப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.