நீதிபதியை பெயரிட்டு அழைப்பதா: வக்கீலுக்கு கோர்ட் கண்டனம்
நீதிபதியை பெயரிட்டு அழைப்பதா: வக்கீலுக்கு கோர்ட் கண்டனம்
ADDED : ஜூலை 21, 2025 11:49 PM

புதுடில்லி: பண மூட்டை சிக்கிய விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக் கோரிய வழக்கு விசாரணையின் போது, நீதிபதி வர்மாவின் பெயரை குறிப்பிட்ட வழக்கறிஞரை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடிந்து கொண்டார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர்.
அப்போது அந்த வீட்டின் ஸ்டோர் ரூமில் இருந்து பாதி எரிந்த நிலையில் மூட்டை, மூட்டையாக, 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வலியுறுத்தல்
இதனால், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நேர்மை கேள்விக்குறியானது. இந்த விவகாரத்தை விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இக்குழு அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்கக் கோரி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும், பிரதமர் மோடிக்கும் பரிந்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி, யஷ்வந்த் வர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா என்பவர், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எப்.ஐ.ஆர்., பதிவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்தார். இதை, அவசர மனுவாக விசாரிக்க பட்டியலிடக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், கே.வினோத் சந்திரன் அமர்வு முன் நேற்று வலியுறுத்தினார்.
“அப்படியெனில் உடனடியாக இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி கவாய், “இம்மனு உரிய நேரத்தில் விசாரிக்கப்படும்,” என்றார்.
விசாரிக்க முடியாது
ஆனாலும் விடாப்பிடியாக இருந்த வழக்கறிஞர் நெடும்பாரா, “மனுவை தள்ளுபடி செய்வது என்பது சாத்தியமில்லை. அவசியம் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட வேண்டும். வர்மாவும் தனக்கெதிரான மனு தள்ளுபடி ஆக வேண்டும் என்றே விரும்புகிறார். ஆகவே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்,” என வாதிட்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதியை, 'வர்மா' என பெயரிட்டு வழக்கறிஞர் நெடும்பாரா அழைத்ததால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசமடைந்தனர். இதனால், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞருக்கும் இடையே காரசாரமாக வாதம் நடந்தது.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:
அவர் என்ன உங்கள் நண்பரா? தற்போதும் அவர் நீதிபதி தான். அவரை எப்படி நீங்கள் மரியாதை குறைவாக பெயர் சொல்லி அழைக்கலாம்? இப்போதும் அவர் நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் என்பதை மறக்காதீர்கள். கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மீண்டும் ஆவேசம்
ஆனாலும் வழக்கறிஞர் நெடும்பாரா தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். “பெருமை அவருக்கு இல்லை என நான் நினைக்கிறேன். ஏனெனில், அவருக்கு எதிரான வழக்கு, விசாரணைக்காக ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது,” என்றார்.
இதனால் மீண்டும் ஆவேசமடைந்த தலைமை நீதிபதி கவாய், “நீதிமன்றத்திற்கு உத்தரவிடும் அதிகாரம் யாருக்கும் கிடையாது,” என்றார். மேலும், மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.