இலவச மின்சாரம் வழங்கினால் பா.ஜ.,வுக்கு பிரசாரம்: கெஜ்ரிவால்
இலவச மின்சாரம் வழங்கினால் பா.ஜ.,வுக்கு பிரசாரம்: கெஜ்ரிவால்
ADDED : அக் 06, 2024 08:22 PM
புதுடில்லி:“தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கினால், டில்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்வேன்,” என, டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் 'ஜன் தா கி அதலாத்' கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:
சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள ஹரியானா மற்றும் ஜம்மு- காஷ்மீரில் இருந்து பா.ஜ., அகற்றப்படும் என்பது கருத்துக் கணிப்புகளில் உறுதியாகி இருக்கிறது. பா.ஜ.,வின் இரட்டை இயந்திர அரசியல் தோல்வி அடைந்து விட்டது. ஏனென்றால் அது இரட்டை அரசியல் அல்ல.
இரட்டைக் கொள்ளை மற்றும் இரட்டை ஊழல் என்பதுதான் சரியானது.
வரும் பிப்ரவரியில் டில்லி சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன், பா.ஜ., ஆட்சி நடக்கும் 22 மாநிலங்களிலும் இலவச மின்சாரம் வழங்க பிரதமர் மோடியால் முடியுமா? இதை மோடிக்கு நான் சவால் விடுகிறேன். அவ்வாறு செய்தால், டில்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்கிறேன்.
டில்லியில் பஸ் மார்ஷல்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் வீட்டுக் காவலர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதில் இருந்தே பா.ஜ., ஏழைகளுக்கு எதிரான கட்சி என்பதை உணர முடியும். டில்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆட்சி செய்ய விடாமல், துணைநிலை கவர்னர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.