காங்., வேட்பாளருக்கு பிரசாரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., விளக்கம்
காங்., வேட்பாளருக்கு பிரசாரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., விளக்கம்
ADDED : பிப் 15, 2024 06:32 AM

பெங்களூரு: ''எனக்கு எதிராக செயல்படுபவருக்கு, நான் ஏன் பிரசாரம் செய்ய வேண்டும்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகா மேலவையில் காலியாக இருக்கும், பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு, நாளை இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணாவை ஆதரித்து, பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் பிரசாரம் செய்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
என் தொகுதியில் நிலவும், குடிநீர் பிரச்னை தொடர்பாக பஞ்சாயத்து ஊழியர்களுடன், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினேன். அப்போது, புட்டண்ணா அங்கு வந்தார். தன்னை ஆதரிக்கும்படி என்னிடம் கேட்டு கொண்டார். இதனால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன்.
பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.ஜ.த.,வின் ரங்கநாத், இதுவரை என்னை சந்தித்து ஆதரவு கேட்கவில்லை.
எனக்கு எதிராக முழுக்க, முழுக்க செயல்படுபவர் அவர். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வத் நாராயணா, விஜயேந்திராவுக்கு எதிராக, ரங்கநாத் பேசிய வீடியோக்கள் என்னிடம் உள்ளது.
எங்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு, ஆதரவாக நான் பிரசாரம் செய்ய வேண்டுமா. எனக்கு சுயமரியாதை இல்லையா. புட்டண்ணாவை ஆதரித்து பிரசாரம் செய்தது குறித்து, எங்கள் கட்சி தலைவர்கள் கேட்டால், விளக்கம் அளிக்க தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

