ADDED : டிச 25, 2024 12:17 AM

சபரிமலை:சபரிமலையில் நடந்த கற்பூர ஆழி பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. மண்டல பூஜைக்கு முன்னோடியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பிலும், போலீஸ் துறை சார்பிலும் இரண்டு நாட்கள் கற்பூர ஆழி பவனி நடைபெறுகிறது.
நேற்று மாலை தீபாராதனைக்கு பின்னர் தேவசம் போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழிபவனி தொடங்கியது. கோவில் கொடிமரம் முன் இரண்டு பக்கமும் கம்பிகளால் இணைக்கப்பட்ட வட்ட வடிவ பாத்திரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கற்பூரம் ஏற்றி பவனியை தொடங்கி வைத்தார். இதை இரண்டு ஊழியர்கள் முன்னும் பின்னுமாக அசைத்து செல்லும்போது கற்பூர தீபம் வானை நோக்கி எழுந்து சென்றது.
சிவன், பார்வதி, விஷ்ணு, நாரதர், தேவி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்தவர்கள் ஊர்வலத்தில் முன் வர, புலி மேல் அமர்ந்துள்ள அய்யப்பனை வாகனமாக பக்தர்கள் சுமந்து வந்தனர். சன்னிதானத்தில் தொடங்கிய இந்த பவனி, மாளிகைப்புறம் கோவிலுக்கு சென்று பின் கோவிலை வலம் வந்து 18 படிகள் முன்னால் நிறைவுபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் சரண கோஷம் முழக்கியபடி கலந்து கொண்டனர்.

