போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர் தேர்தல்களில் ஓட்டளிக்க முடியுமா? எஸ்.ஐ.ஆர்., வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
போலியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர் தேர்தல்களில் ஓட்டளிக்க முடியுமா? எஸ்.ஐ.ஆர்., வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : நவ 27, 2025 08:48 PM

புதுடில்லி : 'குடியுரிமைக்கான உறுதியான சான்றாக ஆதார் அட்டையை கருத முடியாது; போலியாக அல்லது மோசடியாக ஆதார் அட்டை வாங்கியதால், ஊடுருவல்காரர் ஒருவரால் ஓட்டளிக்க முடியுமா' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பீஹாரில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டு, சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதையடுத்து, தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., பணி நடந்து வருகிறது. இந்தப் பணியை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் நடத்தப்படும் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகள் சார்பிலும், சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் நேற்று(நவ.,26) விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில், பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., தொடர்பான மனுக்கள் மீது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது, படிவம் 6ல் வாக்காளர்களால் அளிக்கப்படும் விண்ணப்பங்களை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, மனுதாரர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது:தங்களிடம் வரும் அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க, தேர்தல் கமிஷன் ஒன்றும் போஸ்ட் ஆபிஸ் அல்ல. வாக்காளர்கள் படிவம் 6ல் சமர்ப்பிக்கும் அனைத்து விபரங்களையும் சரிபார்க்க தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதேபோல், ஆதார் என்பது குடியுரிமைக்கான உறுதியான சான்று இல்லை. இது, அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதை வைத்து எப்படி வாக்காளர் ஆக முடியும், பிழைப்பு தேடி இங்கு வந்தவர்கள், ஆதாரை வைத்திருந்தால் மட்டும் ஓட்டளித்துவிட முடியுமா? ஒருவர் அண்டை நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தொழிலாளியாக இங்கு வேலை செய்கிறார் என்றும் வைத்துக்கொள்வோம்; போலியாக அல்லது மோசடியாக அவர் ஆதார் வாங்கியிருக்கலாம். அதற்காக அவரை ஓட்டளிக்க அனுமதிப்பீர்களா? எனவே, ஆதார் என்பது அடையாள ஆவணம் மட்டுமே.இவ்வாறு அவர்கள் கூறினர்.

