'அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆயுர்வேத சிகிச்சையை சேர்க்க முடியுமா?':சுப்ரீம் கோர்ட் கேள்வி
'அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆயுர்வேத சிகிச்சையை சேர்க்க முடியுமா?':சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : நவ 09, 2024 12:48 AM

புதுடில்லி:தேசிய ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உட்பட பாரம்பரிய சிகிச்சை முறைகளை சேர்க்கக்கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாரம்பரிய முறை
ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை, மத்திய அரசு 2018ல் துவங்கியது.
இந்நிலையில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதற்கிடையே, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், 'மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அலோபதி மருத்துவம் மற்றும் அது சார்ந்த மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
'இது, காலனித்துவ ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. நம் நாட்டில் பாரம்பரிய முறையில் அளிக்கப்பட்டு வரும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் இத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
'தற்போதைய காலகட்டத்தில், இத்தகைய சிகிச்சை முறைகள் நம் மக்களுக்கு அவசியம் தேவை. எனவே, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை சேர்க்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
நோட்டீஸ்
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி கள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.