இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க முடியுமா? தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் கேள்வி
இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க முடியுமா? தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் கேள்வி
ADDED : அக் 16, 2024 02:53 AM
புதுடில்லி,தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட புதிய மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், தேர்தல் சமயங்களில் வாக்காளர்களை கவர இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றன. பின், அவற்றை நிறைவேற்ற முடியாமல், நிதிச் சுமையை காரணம் காட்டுவதால் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த ஷஷாங்க் ஜே ஸ்ரீதரா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
கணக்கில் அடங்காத இலவச வாக்குறுதிகளால் கடும் நிதிச்சுமை ஏற்படுகிறது. மேலும், தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்ய எந்த அமைப்பும் கிடையாது.
எனவே, அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பதைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த அமர்வு, இந்த மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில், ஏற்கனவே பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், அவற்றுடன் இந்த மனுவையும் சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.