ADDED : பிப் 04, 2025 06:47 AM

முழு முதற்கடவுளான விநாயகரை, வினை தீர்க்கும் கடவுள் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனால் அனைத்து கோவில்களிலும் விநாயகர் சிலை இருக்கும். யானையையும் விநாயகராக பாவித்து மக்கள் வழிபடுவர். இந்நிலையில், ஐந்து முகம் கொண்ட விநாயகர் கோவிலை பற்றி பார்க்கலாம்.
தனித்தனி உடல்
பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் வழியில் உள்ளது கெங்கேரி. இங்கு ஐந்து முகங்களுடன் விநாயகர் சிலை உள்ள பஞ்சமுகி விநாயகர் கோவில் உள்ளது.
இந்த சிலைகளின் தனி சிறப்பு என்னவென்றால், தெய்வத்தின் ஒவ்வொரு முகமும் தனித் தனி உடல்களை கொண்டது. கடந்த 1977ம் ஆண்டு விநாயகர் பக்தர் ஒருவர் பஞ்சமுகி விநாயகர் கோவிலை கட்டுவதற்காக, 1 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ விநாயகர் அறக்கட்டளைக்கு வழங்கினார். சிலரின் நிதி உதவியால் கோவில் கட்டப்பட்டது.
மேரு சக்கரம்
கடந்த 1984ல் சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் விநாயகர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். இந்த கோவில் மேரு சக்கர வடிவில் உள்ளது. இதனால் மகாமேரு பஞ்சமுகி விநாயகர் கோவில் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
கோவிலின் முதல் நுழைவு வாயிலை கடந்து செல்லும் போது, செவ்வக நீர் நிறைந்த குளத்தை காணலாம். அந்த குளத்து தண்ணீரின் மீது விநாயகரின் சிலை பிரதிபலிக்கிறது.
பஞ்ச கோஷம்
கோவிலின் நான்கு திசைகளை நோக்கி விநாயகரின் நான்கு முகங்கள் உள்ளன. ஐந்தாவது முகம் தலைக்கு மேல் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகமும் அன்னமயம், பிராண மயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் ஆகிய பஞ்ச கோஷங்களை குறிக்கிறது.
கோவிலின் கருவறையில் 6 அடி உயரத்தில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட பஞ்சமுக விநாயகர் சிலை உள்ளது. கருவறையின் மேற்கூரையில் விநாயகரின் 32 வடிவங்கள் அழகாக சேர்க்கப்பட்டு உள்ளன. சிவன், அய்யப்பன், பார்வதி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. கோவிலின் உட்புறம் பளிங்கு கற்களால் செய்யப்பட்டுள்ளது.
ஆசை தொட்டி
கோவிலை சுற்றி தொட்டி உள்ளது. அந்த குளத்தை ஆசை தொட்டி என்று பக்தர்கள் அழைக்கின்றனர். அந்த குளத்தில் நாணயங்களை போட்டு தங்களது விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று விநாயகரை வழிபட்டு செல்கின்றனர்.
இந்தக் கோவிலில் குரு பூர்ணிமா, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பவுர்ணமி அன்று சத்யநாராயண சுவாமி பூஜை நடத்தப்படுகிறது. கோவிலின் நடை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து கெங்கேரி, ஒண்டர்லா செல்லும் பி.எம்.டி.சி., பஸ்களில் சென்று கெங்கேரி பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள கோவிலை சென்றடையலாம். பஸ் நிலையத்தில் இருந்து நடந்து கூட செல்லலாம். ஆட்டோ வசதியும் உள்ளது. பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு செல்லும் ரயிலில் சென்று கெங்கேரி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்தும் கோவிலுக்கு செல்லலாம்.
-- நமது நிருபர் - -

