கர்நாடக கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டேவுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா?
கர்நாடக கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டேவுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா?
ADDED : அக் 18, 2024 07:27 AM

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகம், கர்நாடகாவை சேர்ந்த வீரர்கள் பங்களிப்பு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெங்களூரை சேர்ந்த ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்பட்டவர். இந்திய அணிக்கு அவர் பயிற்சியாளராக இருந்த போது 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று கொடுத்தவர்.
ஜவகல் ஸ்ரீநாத், ராபின் உத்தப்பா, வெங்கடேஷ் பிரசாத், ஸ்டூவர்ட் பின்னி, தேவ்தத் படிகல், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஷ் கோபால், கிருஷ்ணப்பா கவுதம், வினய்குமார் உட்பட பல கர்நாடக கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் ஜொலித்து உள்ளனர்.
இன்னும் பல இளம் வீரர்கள் ஜொலித்து வருகின்றனர். கர்நாடகாவில் இருந்து, இந்திய அணிக்காக விளையாடிய மனீஷ் பாண்டே, 35 கவனிக்கத்தக்க ஒரு வீரர்.
சதம் அடிப்பு
உத்தரகாண்ட் மாநிலம், நைனிடாலில் கடந்த 1989 செப்டம்பர் 10ல் மனீஷ் பாண்டே பிறந்தார். அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். மனீஷ் பாண்டேவுக்கு 15 வயது இருக்கும் போது, அவரது குடும்பம் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்தது.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்த அவர், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்து முறையாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.
மாநில அளவில் நடந்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, இந்திய அணியில் இடம் கிடைத்தது. 2008ல் மலேஷியாவில் நடந்த, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை இறுதி போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியில் மனீஷ் பாண்டேவும் இருந்தார்.
கடந்த 2009 ல் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
முதலில் துவக்க வீரராக விளையாடினார். பின், நடுவரிசையில் களம் இறங்கினார். ஐந்து ஆண்டுகள் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.
'பார்ம் அவுட்'
கடந்த 2014ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சென்றார். அந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 94 ரன்கள் அடித்து, அணி கோப்பை வெல்ல உதவினார்.
இதனால், 2015ல் இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது. 2015 முதல் 2021 வரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும், 2015 முதல் 2020 வரை 20 ஓவர் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.
நடுவரிசையில் களம் இறங்கி, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2020க்கு பின் அடிக்கடி காயத்தில் சிக்கினார்.
பார்ம் அவுட்டும் ஆனார். இதனால், இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியிலும், அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. பெரும்பாலான போட்டிகளில் களம் இறங்க அவருக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை. கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடக்கும், மஹாராஜா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடினாலும், அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இருந்து அழைப்பு வரவில்லை.
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது எப்போது என்று, ஆர்வமாக காத்து உள்ளார். இப்போது அவருக்கு 35 வயது ஆகிவிட்டது. அணியில் மீண்டும் இடம் கிடைத்தால், ஓரிரு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடலாம் என்பது, அவரது ரசிகர்கள் கருத்து. மனீஷ் பாண்டே பீல்டிங்கில் புலி. அவர் கேட்ச்களை தவற விடுவது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -