மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை !
மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை !
ADDED : ஆக 10, 2024 12:43 PM

புதுடில்லி: டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வெளியாகி உள்ள மணீஷ் சிசோடியா, மீண்டும் துணை முதல்வர் ஆவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
டில்லியில் கெஜ்ரிவால் அமைச்சரவையில் நிதித்துறை, கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்ட முக்கிய 18 துறைகளை கவனித்து வந்த துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த ஆண்டு பிப்., மாதம் கைதாகி செய்யப்பட்டார். இதனால், பதவியை ராஜினாமா செய்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நேற்று அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் கிடைத்தது.
கடந்த காலங்களில் அவரின் செயல்பாடு காரணமாகவும், கெஜ்ரிவால் சிறையில் உள்ளதாலும் மணீஷ் சிசோடியாவை மீண்டும் துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இது நடப்பதில் சில சிக்கல்கள் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
அமைச்சரை நியமிப்பது என்பது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் சிறையில் உள்ளார். முக்கிய ஆவணங்களில் அவர் கையெழுத்திட முடியாது. இது முதல் சிக்கல். அடுத்ததாக, டில்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. புதிய அமைச்சரை நியமிப்பது தொடர்பாக, கவர்னர் வாயிலாக ஜனாதிபதியிடம் முதல்வர் அனுமதி பெற வேண்டும். ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அமைச்சரை நியமிக்க முடியும். இது இரண்டாவது சிக்கலாக அமைந்துள்ளது.
அடுத்த 6 மாதங்களில் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், மணீஷ் சிசோடியாவிற்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என ஆம் ஆத்மி கட்சிக்குள் ஆலோசனை நடந்து வருகிறது. சிசோடியா மற்றும் அவரது மனைவியின் உடல்நிலை குறித்த கவலையும் ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் உள்ளது.

