அமெரிக்க அதிபர் டிரம்பால் இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியுமா?
அமெரிக்க அதிபர் டிரம்பால் இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியுமா?
UPDATED : அக் 20, 2025 07:31 AM
ADDED : அக் 20, 2025 06:51 AM

டி.எஸ்.திருமூர்த்தி,ஐநாவுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர தூதர், ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் சமீபத்தில் கையெழுத்தானது. இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த, 20 அம்ச திட்டம் மற்றும் அவரது முயற்சிகள் முக்கிய பங்காற்றின.
உலகத் தலைவர்கள் முன்னிலையில் டிரம்ப் தன் பங்கினை உறுதியாக நிலைநாட்டினார். இந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது; ஆனால் அவர் நம் வெளியுறவு இணை அமைச்சரை அனுப்பி வைத்தார்.
அதிபர் டிரம்பின், 20 அம்ச திட்டம் குறித்த சந்தேகம் தவிர்க்க முடியாதது. ஏனெனில், அவரது சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் இந்த ஆண்டு ஜனவரியில் உருவாக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை, இஸ்ரேல் தனிப்பட்ட முறையில் ரத்து செய்தது.
இந்த முறை போர்நிறுத்தம் நீடிக்கும் என நம்பப்படுகிறது. இருப்பினும், இஸ்ரேல் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க எல்லா காரணங்களையும் பயன்படுத்தும்.
அச்சம்
உயிருடன் இருந்த, 20 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது, இந்த ஒப்பந்தத்தின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்களை இடிபாடுகளிலிருந்து மீட்பது கடினமாக இருந்தாலும், அவற்றை திருப்பி அனுப்பும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் இதையே காரணமாகக் காட்டி இஸ்ரேல் பேச்சை நிறுத்தும் முயற்சியில் உள்ளது.
டிரம்பின் இந்த திட்டத்தை இஸ்ரேல் அல்லது ஹமாஸ் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், திட்டம் மிக விரிவானது.
பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் சர்வதேச பங்கேற்பு போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. அவர்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும். காசா மக்கள் தங்கள் இடங்களுக்கு திரும்பி வருகின்றனர், ஆனால் பெரும்பாலான நகரங்கள், வீடுகள் அழிந்துவிட்டன.
மனிதாபிமான உதவிகள் மெதுவாக வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும், போர் நிறுத்தம் மீண்டும் முறிந்து விடுமோ என்ற பயம் இன்னும் நிலவுகிறது.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலனாது மட்டுமே இந்த ஒப்பந்தம். முழு பாலஸ்தீனர்களுக்கானது அல்ல. ஹமாஸ் தற்போது பிழைத்து இருப்பது குறித்தே கவலைப் படுகின்றனர்.
அவர்கள் ராணுவ ரீதியில் பலவீனமடைந்துள்ளனர். அவர்களின் கருத்தியல் சிதைந்துள்ளது. அதனால், காசா மக்களின் நலனுக்குப் பதிலாக ஹமாஸ் தங்களின் நலனையே முன்னிலைப் படுத்தும் அபாயம் உள்ளது.
அவர்கள் முழுமையாக ஆயுதத்தை ஒப்படைக்க மறுத்தால், அது ஒப்பந்தத்தைத் முறிக்க இஸ்ரேலுக்கு ஒரு நல்ல காரணமாக மாறலாம்.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உள்நாட்டு மக்கள் தந்த அழுத்தம் தற்போது இல்லை. இஸ்ரேல் படைகள் இன்னும் காசாவின், 52 சதவீத பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே எப்போது வேண்டுமானாலும் ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியது என குற்றஞ்சாட்டி, மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.
விரும்பமாட்டார்
ஹமாஸ் தற்போது நம்பும் ஒரே உத்தரவாதம், அமெரிக்காவும் மற்ற பிராந்திய நாடுகளும் தான். அவர்கள் இஸ்ரேலை மீண்டும் போரைத் தொடங்க அனுமதிக்க மாட்டார்கள் என நம்புகின்றனர்.
டிரம்ப் தன் போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்படுவதை விரும்பமாட்டார். மேலும், காசாவின் மறுகட்டமைப்பை அமெரிக்கா மேற்கொள்வது இஸ்ரேலுக்கு ஒரு தடையாகவும் அமையலாம். ஆனால் இது போதுமானதா என்பதே கேள்வி.
காசாவை சர்வதேச அமைப்பு ஒன்றின் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது டிரம்பின் திட்டம். அந்த அமைப்பு அவர் தலைமையிலான சர்வதேச அமைதி வாரியம் மற்றும் சர்வதேச அமைதிப்படை என்பதுதான் முக்கிய அம்சம். இது ஒரு நல்ல தொடக்கம் போல தெரிந்தாலும், இதில் பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை.
தேர்தல், மக்கள் பிரதிநிதித்துவம் போன்றவை இதில் இடம் பெறவில்லை. ஹமாஸ் இதை ஏற்க மறுத்து, ஆட்சி குறித்து முடிவெடுக்க பெரும்பாலான பாலஸ்தீனர்களின் ஒப்புதல் தேவை என்று கூறியுள்ளது. இதில் ஹமாஸும் பங்கேற்கும். ஆனால் தற்போதைக்கு ஒருங்கிணைந்த பாலஸ்தீன தலைமை இல்லை.
மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்கள் வேகமாக அதிகரித்துள்ளன. இது அங்கு நிலவும் முக்கிய பிரச்சனை. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கள் நிலமும் வாழ்வாதாரமும் இழந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாலஸ்தீன நாடு ஒருபோதும் உருவாகாது என உறுதி எடுத்துள்ளார்.
ஆக்கிரமிப்பு
அவரை ஆதரிக்கும் தீவிர வலதுசாரி நாடுகள் மேற்கு கரையை இணைத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். உலகம் இப்போது காசாவை மட்டுமே கவனிக்கிறது, மேற்கு கரையின் ஆக்கிரமிப்பு மறைக்கப்படுகிறது.
தற்போது இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க, அமெரிக்காவும், வளைகுடா நாடுகள் மற்றும் பிராந்திய நாடுகள் எந்த எல்லை வரை செல்வர் என்பது தான், இவ்வாறு அவர் கூறினார்.