ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாமா? நிபுணர் குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்!
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாமா? நிபுணர் குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்!
ADDED : பிப் 15, 2024 01:12 AM
புதுடில்லிதமிழகத்தின் துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
துாத்துக்குடியில் இயங்கி வந்த, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக சில அமைப்புகள் குற்றஞ்சாட்டின. இது தொடர்பாக, ஆலையை முற்றுகையிடும் போராட்டம், 2018ல் நடந்தது. அந்தப் போராட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது. அந்தாண்டு, மே 22ல் நடந்த போராட்டத்தில் காவல் துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆலையை மூட உத்தரவிட்டது. இதன்படி, ஆலையை மூடும் உத்தரவை, தமிழக அரசு, 2018 மே 28ல் பிறப்பித்தது.
இந்த உத்தரவையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் எதிர்த்தும், வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வேதாந்தா குழுமத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஷ்யாம் திவான் வாதிட்டதாவது:
இந்த ஆலை நாட்டின் மொத்த தாமிரத்தின் தேவையில், 36 சதவீதத்தை நிறைவேற்றி வந்தது. ஆலை மூடப்பட்டதால், தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர, 2014 முதல் 2018ம் ஆண்டு வரை, வேதாந்தா நிறுவனம், 13,000 கோடி ரூபாயை பல்வேறு வரிகளாக செலுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலை நாங்கள் பாதுகாக்கவில்லை என்று கூறப்பட்ட காரணங்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லை. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வந்தன.
ஆலையை மூடும் உத்தரவு மிகவும் கடுமையானது. இந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:
இது ஒரு சாதாரண ஆலையல்ல. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தாமிர உருக்கு என்ற சொத்தை நாடு இழக்க கூடாது. இந்த ஆலை தொடர்பாக என்னென்ன சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு பட்டியலிடட்டும். அதை நாங்கள் பரிசீலித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கிறோம்.
இந்த ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆராய, ஒரு நிபுணர் குழுவை அமைப்போம். நீரி என்ற அழைப்பு, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம், மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம், இந்தத் துறையில் நிபுணர்களாக உள்ள மூன்று பேர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
இந்தக் குழு ஆய்வு செய்து, ஒரு மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.

