எத்னால் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? பா.ஜ., தலைவருக்கு சோமசேகர் சவால்!
எத்னால் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? பா.ஜ., தலைவருக்கு சோமசேகர் சவால்!
ADDED : டிச 10, 2024 07:21 AM

பெலகாவி: ''தைரியம் இருந்தால் கட்சிக்கு எதிராக பேசும், பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என, பா.ஜ., தலைமைக்கு அக்கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ., சோமசேகர் சவால் விடுத்து உள்ளார்.
பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ., -- எம்.எல்.ஏ., சோமசேகர். இவர் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார். அடிக்கடி முதல்வர், துணை முதல்வரையும் சந்தித்து வருகிறார். ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அடிக்கடி பா.ஜ., தலைவர்களுக்கு எதிராக பேசினார். சமீபத்தில் நடந்த சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் கூட, காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
கட்சிக்கு எதிராக செயல்படும் சோமசேகர், அவரது கூட்டாளியான எல்லாபூர் பா.ஜ., -- எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கட்சியின் கோர் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அழைப்பு இல்லை
இது குறித்து, பெலகாவியில் சோமசேகர் நேற்று கூறியதாவது:
என் தொகுதியில் நிறைய வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டி உள்ளது. இதனால் அடிக்கடி முதல்வர், துணை முதல்வரை சந்தித்து பேசுகிறேன். தொகுதி வளர்ச்சி பணி தவிர தவிர, அரசியல் ரீதியாக அவர்கள் இருவருடன் நான் எதுவும் பேசியது இல்லை.
கடந்த சட்டசபை கூட்ட தொடரின் போது, காங்கிரஸ் வைத்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டேன். அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்ததால் சென்றேன். இப்போது குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இங்கு வந்துள்ளேன்.
பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு அழைத்தால் செல்வேன். இதுவரை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. கட்சிக்கு எதிராக நான் ஒருபோதும் பேசியதில்லை. என் மீதும், சிவராம் ஹெப்பார் மீதும் என்ன தவறு உள்ளது என்று தெரியவில்லை. எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதை வரவேற்கிறேன்.
தைரியம் உள்ளதா?
கட்சி மேலிடம் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் அதற்கு உரிய விளக்கம் அளிப்போம். கட்சிக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது நடவடிக்கை எடுக்க, விஜயேந்திராவுக்கு தைரியம் உள்ளதா.
பெங்களூரு ஜெயநகர் தொகுதிக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் என்று, துணை முதல்வர் சிவகுமாரிடம் நான் கேட்டு கொண்டேன். அந்த தொகுதி எம்.எல்.ஏ., ராமமூர்த்தியும் அரசியல் ரீதியாக நிறைய கஷ்டங்களை அனுபவித்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் என, சிவகுமாரிடம் எடுத்து கூறினேன். இதையடுத்து, தொகுதிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பது உண்மை தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

