எத்தனால் கலந்த பெட்ரோலால் பாதிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வாகனத்தை காட்ட முடியுமா? விமர்சகர்களுக்கு நிதின் கட்கரி கேள்வி
எத்தனால் கலந்த பெட்ரோலால் பாதிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வாகனத்தை காட்ட முடியுமா? விமர்சகர்களுக்கு நிதின் கட்கரி கேள்வி
ADDED : ஆக 09, 2025 12:32 AM

புதுடில்லி : “எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் ஏதேனும் ஒரு வாகனம் பாதிப்புக்குள்ளான நிகழ்வை காட்ட முடியுமா?” என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அரசின் நடைமுறையை விமர்சிப்பவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நம் நாட்டின் எண்ணெய் தேவையில், 85 சதவீதம் வரை இறக்குமதி செய்யப்படுகிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு வெறும் 1.5 சதவீதத்துடன் துவங்கியது.
விமர்சனம் கடந்த, 2022ல் 10 சதவீதமானது. இந்நிலையில் தற்போது நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 2030-ஐ காட்டிலும் ஐந்து ஆண்டுக்கு முன்னதாகவே பெட்ரோலில், 20 சதவீதம் எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால், வாகனங்களின் மைலேஜ் குறையும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இக்குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பங்கேற்று பேசியதாவது:
பெட்ரோலில் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் திட்டம் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது என இதுவரை எந்த புகாரும் வரவில்லை.
ஏதேனும் ஒரு வாகனம் பாதிக்கப்பட்ட நிகழ்வை காட்ட முடியுமா? வாகனங்களில் ஏற்படும் சாதாரண பிரச்னைக்கு கூட இதுதான் காரணம் என விமர்சனம் எழுகிறது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு வெகுவாக குறைகிறது.
பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் வாயிலாக, இந்த திட்டம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை இலக்குகளை அடைய உதவும். இந்த திட்டத்தால் பொருளாதாரம் மேம்படும்.
இதனால், எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்கும் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குவின்டால் 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட சோளம், தற்போது எத்தனால் தயாரிக்க பயன்படுவதால் குவின்டால் ஒன்றிற்கு 2,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கவலைப்படாது இந்த விலை உயர்வு கிராமப்புற விவசாய வருமானத்திற்கு நேரடியாக பயனளிக்கிறது.
சிலர், தங்களின் சொந்த நலன்களை கருத்தில் கொண்டு விமர்சித்து வருகின்றனர். எனினும், அதைப்பற்றி அரசு கவலைப்படாது.
எத்தனால் கலந்த பெட்ரோலை வாகனங்களுக்கு பயன்படுத்தி அனைத்து விதமான பரிசோதனைகளையும் இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி அமைப்பு மேற்கொண்டது. இதை, மத்திய அமைச்சகமும் ஆய்வு செய்து தரநிலைகளை நிர்ணயித்தது.
இவ்வாறு அவர் பேசினார்.