உங்கள் சகோதரர் சொத்து கணக்கை காட்ட முடியுமா? மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு சிவகுமார் சவால்!
உங்கள் சகோதரர் சொத்து கணக்கை காட்ட முடியுமா? மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு சிவகுமார் சவால்!
ADDED : ஆக 06, 2024 02:10 AM

பெங்களூரு : ''மத்திய அமைச்சர் குமாரசாமி, முதலில் தன் சகோதரரின் சொத்துகள் பற்றிய தகவலை, பகிரங்கப்படுத்தட்டும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் சவால் விடுத்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என் சொத்துகளின் பின்னணி குறித்து, மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்புகிறார். கேள்வி எழுப்பும் அதிகாரம், அவருக்கு உள்ளது; கேட்கட்டும். என் குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை கேட்டுள்ளார். பட்டியலை கொடுக்க நான் தயார். இதில் எந்த ஒளிவு, மறைவும் இல்லை. ஆனால் அதற்கு முன், குமாரசாமியின் சகோதரர்களின் சொத்துகளை கணக்கு காண்பிக்க வேண்டும்.
சகோதரர் அதிகாரம்
குமாரசாமி முதல்வராக இருந்த போது, இவரது சகோதரர் அதிகாரத்தை எப்படி தவறாக பயன்படுத்தினார் என்பது, எங்களுக்கு தெரியும். குமாரசாமியின் ஊழல்களுக்கு பதில் அளிக்கும்படி, நாங்கள் மக்கள் இயக்கம் மாநாடு நடத்தி, கேள்வி எழுப்பினோம். அதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. இப்போது அவர் கேள்வி எழுப்புகிறார். பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன்.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, ஊழலின் பிதாமகன். இவர் தன் அப்பாவை, ஏன் சிறைக்கு அனுப்பினார். ஏன் ராஜினாமா செய்ய வைத்தார் என்பதற்கு, முதலில் பதில் அளிக்கட்டும். அதன்பின் அவரது கட்சியை சேர்ந்த பசனகவுடா பாட்டீல் எத்னால், கூலிஹட்டி சேகர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும்.
வாக்குறுதி திட்டங்களை நிறுத்தி வைக்க, பா.ஜ., - ம.ஜ.த., முயற்சிக்கின்றன. 10 மாதங்களில் காங்கிரஸ் அரசு கவிழும் என, குமாரசாமி கூறுகிறார். ஆங்கிலேயேரால் காங்கிரசை அழிக்க முடியவில்லை. குமாரசாமியால் முடியுமா. எங்களுடையது 10 மாத அரசு அல்ல, 10 ஆண்டுகள் அரசு.
முஸ்லிம்கள் ஓட்டு
காங்கிரசின் ஒரு திட்டத்தை கூட இவர்களால் நிறுத்த முடியாது. உணர்வை வைத்து அரசியல் செய்யவில்லை. முஸ்லிம்கள் இல்லாதிருந்தால், குமாரசாமி எம்.எல்.ஏ., ஆகியிருக்க முடியாது. இவரது தந்தை, முதல்வராகி இருக்க முடியாது. இப்போது முஸ்லிம்கள் ஓட்டு போடவில்லை என்கின்றனர்.
'பென் டிரைவ்' விஷயத்தில், எங்களுடைய பங்களிப்பு இல்லை. நான் தொட்ட ஆலதஹள்ளி கெம்பே கவுடாவின் மகன். யாருக்கும் பயப்பட மாட்டேன். என் தலைமையில் நடந்த தேர்தலில், காங்கிரசுக்கு 136 சீட்கள் கிடைத்தன. குமாரசாமியின் தலைமையில் வெறும் 19 சீட்கள் தான் வந்தன.
லோக்சபா தேர்தலில், இரண்டு சீட்களில் வெற்றி பெற்று, பா.ஜ.,வினரை பிளாக்மெயில் செய்கிறார். ரேவண்ணாவின் குடும்பம் வேறு; தன் குடும்பம் வேறு என, குமாரசாமி கூறினார்.
இப்போது தன் குடும்ப கவுரவத்தை பிரீத்தம் கவுடா பாழாக்கியதாக குற்றஞ்சாட்டுகிறார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, சீட் கொடுக்க கூடாது என, தேவராஜே கவுடாவை வைத்து கடிதம் எழுத வைத்தது யார். சொந்த அண்ணன் மற்றும் அவரது மகனின் முன்னேற்றத்தையே, குமாரசாமியால் சகிக்க முடியாது. என் முன்னேற்றத்தை எப்படி சகிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.