பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டு உண்மையில்லை என கனடா ஒப்புதல்
பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டு உண்மையில்லை என கனடா ஒப்புதல்
ADDED : நவ 23, 2024 08:41 AM
ஒட்டாவா : கனடாவில் நடக்கும் குற்றச் சம்பவங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிந்தே நடப்பதாக கனடா ஊடகம் வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்திய துாதரக அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
இதை தொடர்ந்து இந்தியா - கனடா உறவில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில், கனடாவை சேர்ந்த, 'தி குளோப் அண்டு மெயில்' நாளிதழ், இந்தியாவுக்கு எதிரான செய்தி ஒன்றை கடந்த 19ம் தேதி வெளியிட்டது.
அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை மற்றும் கனடாவில் அரங்கேறி வரும் குற்றச் செயல்கள் குறித்து பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு நன்றாகவே தெரியும் என, கனடா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டது.
'இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது; சிரிப்பை வரவழைக்கிறது' என, நம் வெளியுறவுத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், கனடா பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் நதாலி ட்ரூயின் நேற்று கூறியதாவது:
இந்த குற்றச்சாட்டை கனடா அரசு தெரிவிக்கவில்லை. இங்கு நடக்கும் குற்றச் செயல்களுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஊகத்தின் அடிப்படையில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.