ADDED : அக் 16, 2024 02:53 AM
புதுடில்லி, வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில், இந்திய துாதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, கனடா துாதர்களை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:
கனடா குடியுரிமை பெற்ற தெற்காசியர்கள் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த சதி வேலைக்கு பின்னால், சில இந்திய ஏஜென்ட்கள் உள்ளனர்.
அவர்கள், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் உதவியுடன் இதை அரேங்கேற்றுவதை, கனடியன் ராயல் போலீசார் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். எனவே தான் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, ''சமூக விரோதிகளுடன் இணைந்து வன்முறையை கட்டவிழ்த்துவிடும் இந்திய ஏஜென்ட்கள் ஆறு பேரை, கனடாவில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளோம்,'' என்றார்.
இந்த நடவடிக்கைக்கு முன்னதாகவே, அந்த ஆறு துாதரக அதிகாரிகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும், கனடாவுக்கான இந்திய துாதரை திரும்பப் பெற்றது.
இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே, தெளிவற்ற குற்றச்சாட்டுகளை கனடா சுமத்தி வருவதாக தெரிவித்த மத்திய அரசு, அந்நாட்டின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.