பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுங்கள்: சித்தராமையா கடிதம்
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுங்கள்: சித்தராமையா கடிதம்
ADDED : மே 23, 2024 03:43 PM

புதுடில்லி: 'பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்' என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
ம.ஜ.த., தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் சித்தராமையா கூறியிருப்பதாவது: பிரஜ்வல் ரேவண்ணா சலுகைகளை துஷ்பிரயோகம் செய்து தப்பி ஓடிவிட்டார். பிரஜ்வல் ரேவண்ணா ஏப்ரல் 27ம் தேதி தனது பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பிச் சென்றது வெட்கக்கேடானது. பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் இன்று வரை தலைமறைவாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். இதுவரை நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தை பிரதமர் மோடி தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் சித்தராமையா கூறியுள்ளார்.

