ADDED : பிப் 24, 2024 11:20 PM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களை தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வு, கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. இதில், 48 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வின் வினாத்தாள் முன் கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, முறைகேடில் ஈடுபட்ட 240 பேர் கைது செய்யப்பட்டனர். தேர்வு எழுதியவர்கள் மாநிலம் முழுதும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து இந்த தேர்வை ரத்து செய்து மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
போலீஸ் வேலைக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இந்த தேர்வு ரத்து செய்யப்படுகிறது. முறைகேடில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையினர் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

