15 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் ரெடி? களமிறங்க யோசிக்கும் கர்நாடக அமைச்சர்கள்!
15 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் ரெடி? களமிறங்க யோசிக்கும் கர்நாடக அமைச்சர்கள்!
ADDED : பிப் 04, 2024 11:07 PM
பெங்களூரு: ஐந்து வாக்குறுதி திட்டங்களை, அஸ்திரமாக பயன்படுத்தும் காங்கிரஸ், இம்முறை லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளை கைப்பற்ற உறுதி பூண்டுள்ளது. முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற, கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக, திறமையான வேட்பாளர்களை தேடுகிறது. வேட்பாளர்கள் கிடைக்காத தொகுதிகளில், அமைச்சர்களையே களமிறக்க முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என, ஏற்கனவே அமைச்சர்களுக்கு மேலிடம் கட்டளையிட்டுள்ளது.
குடும்பத்தினருக்கு சீட்
இருக்கும் பதவியை துறந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட சில அமைச்சர்களுக்கு, விருப்பம் இல்லை. ஆனால் மேலிடத்தின் உத்தரவை மறுக்க முடியாமல், தேர்தலுக்கு தயாராகின்றனர். சிலர் தங்கள் குடும்பத்தினருக்கு சீட் கேட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் தேர்வு செய்வது குறித்து, ஆலோசனை நடத்தும் நோக்கில், அமைச்சர்களுக்கு, முதல்வர் சித்தராமையா பிப்ரவரி 1ல், விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில், 15 வேட்பாளர்களின் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டியலை காங்., மேலிடத்துக்கு, விரைவில் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். மைசூரு தொகுதியில் பா.ஜ.,வின் பிரதாப் சிம்ஹாவுக்கு எதிராக, ஒக்கலிகர் தலைவரின் பெயரை, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
சுமலதாவுக்கு எதிர்ப்பு
மேலும் 13 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை காங்கிரஸ் தேடி வருகிறது. மாண்டியா தொகுதியில் சுமலதா அம்பரிஷை, காங்., வேட்பாளராக்க முயற்சி நடக்கிறது.
ஆனால், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே வேறொருவரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தார்வாட் தொகுதியில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு எதிராக, காங்., - எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியின் மனைவி சிவலீலாவை களமிறக்க, கட்சி ஆலோசிக்கிறது.
பீதரில் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, தன் மகன் சாகர் கன்ட்ரேவுக்கு சீட் பெற முயற்சிக்கிறார். இதே போன்று, மூத்த தலைவர்கள் ஜெயசந்திரா, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா உட்பட, பலர் தங்கள் மகன்களுக்கு சீட் பெற, தீவிரமாக முயற்சிக்கின்றனர்.

