வலைதள பிரசாரத்திற்கு மாறிய வேட்பாளர்கள்! அச்சக தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடக்கம்
வலைதள பிரசாரத்திற்கு மாறிய வேட்பாளர்கள்! அச்சக தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடக்கம்
ADDED : மார் 18, 2024 05:07 AM
பெங்களூரு : சமூக வலைதள பிரசாரத்திற்கு மாறிய வேட்பாளர்களால், அச்சக தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கி உள்ளது.
சமூக வலைத்தளங்கள் இன்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் பல தொழில்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் முடங்கி உள்ளன. இதில் ஒன்று, அச்சக தொழில். 20 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்தல் அறிவித்துவிட்டால் போதும். வேட்பாளர்கள் தெரு, தெருவாக சென்று பிரசாரம் செய்வர். அவர்களுடன் கூட்டத்தினரும் செல்வர்.
எந்த கட்சி, எந்த சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்றும், வெற்றி பெற்றால் தொகுதிக்காக என்ன செய்வேன் எனவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்வர்.
சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பின்னர், துண்டுப் பிரசுரம் காணாமல் போய்விட்டது. வாட்ஸாப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், வேட்பாளர்கள் நேரடியாக தோன்றி, தொகுதிக்கு என்னென்ன செய்வேன் என்று பேசி வருகின்றனர். இது வாக்காளர்களை கவர்ந்து இருப்பதால், துண்டுப் பிரசுரங்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
இதனால் அச்சக தொழில், முடங்கி உள்ளது. அந்த தொழிலை நம்பி இருக்கும், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விகுறியாகி உள்ளது. அச்சகங்களை மூடும் நிலைக்கு, உரிமையாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
'கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்தல் நேரத்தில் லட்சக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்துக் கொடுத்து உள்ளோம். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் காத்திருந்து, துண்டுப் பிரசுரங்களை வாங்கிச் செல்வர். ஆனால் இப்போது 100 துண்டுப் பிரசுரங்கள் அடிக்க கூட, யாரும் ஆர்டர் தருவது இல்லை' என, அச்சக உரிமையாளர்கள் வருத்தத்துடன் சொல்கின்றனர்.

