பெங்., ஏர்போர்ட்டில் ரூ.23 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்
பெங்., ஏர்போர்ட்டில் ரூ.23 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்
ADDED : ஜன 17, 2025 07:20 AM

தேவனஹள்ளி: பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 23 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பயணியர் கைது செய்யப்பட்டனர்.
'ஹைட்ரோபோனிக்' கஞ்சா எனப்படுவது மண்ணை பயன்படுத்தாமல், செயற்கையான சில வேதி பொருட்களை பயன்படுத்தி வளர்க்கப்படுகிறது.
மண்ணில் காணப்படும் இயற்கையான ஊட்டச்சத்துகளுக்குப் பதிலாக, பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, செயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது. இதில் போதை அதிகம் இருப்பதால், சர்வதேச அளவில் இந்த கஞ்சாவுக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சமீபத்தில் ஒரு விமானம் வந்தது.
அந்த விமானத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உஷாரான அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணியரிடம் சோதனை நடத்தினர்.
இதில், மூன்று பயணியர் நடவடிக்கையில், அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களை தனியாக அழைத்து சென்று சூட்கேசுகள், பைகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, சிறிய பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. கஞ்சாவை சோதனை செய்த போது, 'ஹைட்ரோபோனிக் ரகம்' எனும் என்று தெரிய வந்தது. மொத்தம் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 23 கோடி ரூபாய்.
கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரையும் சுங்க அதிகாரிகள் பிடித்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
கைதானோர் பெயர், விபரம் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 9 ம் தேதி நடந்த இந்த சோதனை, தற்போது தான் வெளியாகி உள்ளது.