மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்த முடியாது: கமல் வழக்கில் உத்தரவு
மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்த முடியாது: கமல் வழக்கில் உத்தரவு
UPDATED : ஜூன் 18, 2025 12:09 AM
ADDED : ஜூன் 17, 2025 11:39 PM

தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அம்மாநில ஐகோர்ட் தடை விதித்ததை எதிர்த்து கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'மன்னிப்பு கேட்குமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது; அது உயர் நீதிமன்றத்தின் வேலையும் அல்ல' என, உத்தரவிட்டது.
கமல்ஹாசனும், மணிரத்னமும் சேர்ந்து தயாரித்த தக் லைப் திரைப்படம், ஜூன் 5ல் வெளியானது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து உருவான மொழி கன்னடம்' என்றார். இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது.
கன்னட அமைப்புகள் போராட்டம் அறிவித்தன. கமல் மன்னிப்பு கேட்டால் தான் படத்தை வெளியிடுவோம் என, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. கமல், 'மன்னிப்பு கேட்க முடியாது; நான் தவறாக பேசவில்லை' என கூறிவிட்டார்.
சட்ட விரோதம்
இது வழக்காக மாறியது. விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி நாக பிரசன்னா, 'கமல் மன்னிப்பு கேட்டால் என்ன குறைந்து விடும்?' என்று கேட்டார். இது கன்னட அமைப்புகளுக்கு உற்சாகம் அளித்தது.
இந்நிலையில், தக் லைப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதித்ததை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அது நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள், 'குண்டர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் விருப்பத்தை அமல்படுத்துவதை ஏற்க முடியாது' என்றனர்.
கர்நாடகா அரசு வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் கர்நாடகா ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு இருக்கிறது' என்றார். இதை கேட்டதும் நீதிபதிகள் கோபம் அடைந்தனர். 'அதற்காக சட்ட விரோத விஷயங்களை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? அந்த படத்துக்கு, சென்சார் போர்டு சான்றிதழ் அளித்துள்ளது.
'அதை வெளியிட அவர்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை பாதுகாப்பது தான் அரசின் கடமை. படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என சிலர் மிரட்டினால், அரசு உடனே தடை செய்யலாமா?' என கேட்டனர்.
கண்டிப்பு
கர்நாடக அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு, 'பிரச்னை முடியும் வரை திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை என, படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்து இருக்கிறார்' என்றார்.
அதற்கு நீதிபதிகள், 'சென்சார் சான்றிதழ் பெற்ற பின் ஒரு படத்தை எவராலும் தடை செய்ய முடியாது. தயாரிப்பாளரை மிரட்ட எவருக்கும் உரிமை கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக 18ம் தேதி கர்நாடகா அரசு தன் பதிலை தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
கமல் மன்னிப்பு கேட்டால் பிரச்னை முடிந்து விடும் என கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி சொன்னதை கண்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'சட்டப்படி எது சரியோ அதை சொல்வது தான் நீதிபதியின் வேலை.
மன்னிப்பு கேள் என்று யாரையும் கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது. அது கோர்ட்டின் வேலை இல்லை” என கண்டிப்புடன் கூறினர்.
தக் லைப் திரைப்படம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- டில்லி சிறப்பு நிருபர் -