ஹரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆவேசம்
ஹரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆவேசம்
ADDED : அக் 09, 2024 02:19 AM
'ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராத விதமாகவும், கள நிலவரத்துக்கு எதிராகவும் உள்ளன. மக்களின் மனங்களுக்கும் நேர்மாறாக உள்ளதால், இந்த தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்பது சாத்தியமில்லை' என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஜெய்ராம் ரமேஷ், 'இ - மெயில்' வாயிலாக நேற்று காலை கடிதம் அனுப்பினார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
குளறுபடி
லோக்சபா தேர்தலைப் போலவே தற்போதைய சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையிலும் குளறுபடி நடக்கிறது. களத்தில் இருந்து வரும் முடிவுகளை, தலைமை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யாமல் தாமதம் செய்கிறது.
இதனால், தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ., அழுத்தம் கொடுத்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. ஹரியானா தேர்தல் நிலவரங்களை, காலை 9:00 முதல் 11:00 மணி வரை எவ்வித விளக்கமுமின்றி மெதுவாக பதிவேற்றம் செய்கின்றனர் என்றால், அதற்கு என்ன பொருள் என்பது புரியவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஹரியானா சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின், டில்லியில் நிருபர்களிடம், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
ஹரியானா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்து பல்வேறு இடங்களிலிருந்து தீவிரமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மூன்று மாவட்டங்களில் இருக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, ஹரியானா காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அனைத்தையும் மொத்தமாக தொகுத்து தேர்தல் கமிஷனிடம் ஓரிரு நாட்களில் புகார் அளிக்க உள்ளோம். எங்களுக்கு போதிய கால அவகாசம் வேண்டும்.
எங்களது வேட்பாளர்கள் எழுப்பியுள்ள மிக தீவிரமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய பதில்களை தேர்தல் கமிஷனிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
ஹரியானாவில், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ள வெற்றி, முறைகேடானது. மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு முற்றிலும் மாறாக, இந்த முடிவு, அவர்களின் விருப்பங்களை திசைதிருப்பி உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான ஜனநாயக நடைமுறைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் முற்றிலுமாக எதிர்பாராதவை.
கள நிலவரங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன. இந்த முடிவுகள், அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளன. ஒரு மாற்று அரசு வேண்டும் என்று, மக்களிடையே நிலவிய பலத்த எதிர்பார்ப்புகளையும் தோற்கடித்து, இந்த வெற்றி உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும், ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டதாலேயே எல்லா விஷயங்களும் முடிவுக்கு வந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. ஆட்டம் முடியவில்லை; இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் கமிஷன் மறுப்பு
காங்கிரசின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தலைமை தேர்தல் கமிஷன், 'லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போதும், இதேபோன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இவை பொறுப்பற்ற, ஆதாரம் இல்லாத, உறுதிப்படுத்தப்படாத தவறான கதைகள்' என கூறியுள்ளது.
- நமது டில்லி நிருபர் -