ADDED : ஏப் 03, 2026 03:37 PM

புதுடில்லி:தவறான பாதையில் வாகனத்தை செலுத்தி, சரியான பாதையில் சென்ற டிரைவர்களுடன் மோதலில் ஈடுபட்ட ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய, போலி நம்பர் பிளேட் பொருத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹரியானா மாநிலம் ரோடக் நகரை சேர்ந்த அங்கித், 28, என்பவர், நீண்ட காலமாக டில்லியில் தங்கியிருந்து, வாடகை கார் ஓட்டி வந்தார். அந்த கார், துவாரகா எக்ஸ்பிரஸ் வே அருகில், தவறான பாதையில் சென்று கொண்டிருந்தது.
எதிர் திசையில், நேர் பாதையில் சென்ற ஓட்டுனர்களுடன் மோதலில் ஈடுபட்ட அங்கித் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவின.
இதையடுத்து, அந்த கார் ஓட்டுனரை கைது செய்ய போலீசார் முயன்றனர். அவரை சுற்றி வளைத்த போலீசார், விசாரித்த போது, அவர் பயன்படுத்திய நம்பர் பிளேட் போலியானது என்பது தெரிந்தது.
அவர் வழக்கமாக ஓட்டிச் செல்லும் காரின் பதிவு காலம் முடிவுக்கு வருவதால், அதிகாரிகளை ஏமாற்ற, போலி நம்பர் பிளேட் பொருத்தியதாக போலீசில் கூறினார். அதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.
