பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த கார் டிரைவர் தப்பினார்
பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த கார் டிரைவர் தப்பினார்
ADDED : செப் 14, 2025 11:00 PM

புதுடில்லி:மேம்பாலத்தில் இருந்து விழுந்த காரின் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேற்கு டில்லி பீரகரியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்துக்கு நேற்று காலை சச்சின் சவுத்ரி,35, என்பவர் காரில் சென்றார்.
வடக்கு டில்லி முகர்பா சவுக் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற போது, ஹைதர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தில் இருந்து கீழே ரயில் தண்டவாளப் பகுதியில் விழுந்தது.
ஆனால், கார் தண்டவாளத்தை தாண்டி புல்வெளி சரிவில் உருண்டதால் தண்டவாளத்துக்கு சேதம் ஏற்படவில்லை. அதேபோல், கார் டிரைவரான சச்சினுக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.
தகவல் அறிந்து, சமய்பூர் பட்லி போலீசார் விரைந்து வந்தனர். கார் அருகே காயங்களுடன் கிடந்த சச்சின் சவுத்ரியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். பலத்த சேதம் அடைந்த நிலையில் கிடந்த கார், கிரேன் வாயிலாக உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால், ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கிடையில், கார் கிடந்த அதே பகுதியில் நீல நிற பைக் ஒன்றும் கிடந்தது.
ஆனால், இந்த விபத்துக்கும் அந்த பைக்குக்கும் தொடர்பு இல்லை எனக் கூறிய போலீசார் அது குறித்தும் விசாரிக்கின்றனர்.