சிறுவனுக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : மார் 14, 2024 07:03 AM

புதுச்சேரி : சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மீனம்பூரை சேர்ந்தவர் ஜாகீர்ஹூசைன்,41; புதுச்சேரியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி ஒதியஞ்சாலை பகுதியில் கார் டிரைவராக இருந்தபோது தனது நண்பரின் 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில் ஒதியஞ்சாலை போலீசார், ஜாகீர்ஹூசைனை கைது செய்து, அவர் மீது புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பச்சையப்பன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஷோபனாதேவி, குற்றம் சாட்டப்பட்ட ஜாகீர்ஹூசைனுக்கு போக்சோ சட்டம் 6வது பிரிவில் 20 ஆண்டும், பிரிவு 12ன் கீழ் 3 ஆண்டும் சிறை தண்டனை விதித்து ஏககாலத்தில் அனுபவிக்கவும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார். தீர்ப்பையொட்டி ஜாகிர்ஹூசைன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுபாட்டில்கள் கடத்திய இருவர் மீது வழக்கு பதிவு
வானுார் : ஆரோவில் அருகே மதுபாட்டில்கள் கடத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர்.
பாப்பாஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படி தனித்தனியாக பையுடன் வந்த இருவரை மடக்கி சோதனை செய்தனர். அதில் பிராந்தி, பீர் பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில், கீழ்புத்துப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலு மகன் சுரேஷ்குமார், 20; மரக்காணம் அடுத்த ஓமிப்பேர் மெயின் ரோட்டை சேர்ந்த அண்ணாமலை மகன் பெருமாள், 26; ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது.
இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, அவர்களிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்தியவர் கைது
விழுப்புரம் அருகே பைக்கில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே கல்பட்டு தென்பெண்ணை ஆற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், காணை சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார், நேற்று காலை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, ஆற்றிலிருந்து, பைக்கில் இரண்டு சிப்பங்களில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்த சிறுவாக்கூரை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன், 27; என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
பிஞ்சிடம் அத்துமீறல் வாலிபருக்கு '20 ஆண்டு'
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலைச் சேர்ந்தவர் பிரதீப், 21,
கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு இவரது உறவினர் மகளான, தங்கை உறவு முறை உள்ள 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் பிரதீப்பை கைது செய்தனர்.
இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். பிரதீப்புக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
ரூ.86 லட்சம் கையாடல் செய்த அறநிலைய ஆய்வாளர் 'எஸ்கேப்'
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளராக, 2021ல் இருந்துபணிபுரிந்தவர் பால்வண்ணன், 50. இவரது கட்டுப்பாட்டில் ஊத்தங்கரை தாலுகாவில், 43 கோவில்கள் இருந்தன கடந்த, 2023 டிச., 12ல் இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், பல வாரமாகியும், அவர் தன் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை; கும்மிடிப்பூண்டிக்கு சென்று பொறுப்பும் ஏற்கவில்லை. துறை அதிகாரிகள் கேட்ட போது, உடல்நலம் சரியில்லை எனக்கூறி சமாளித்தார். சந்தேகமடைந்த அதிகாரிகள் கடந்த பிப்., 19ல் ஊத்தங்கரை ஹிந்து சமய அறநிலையத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடாஜலம் என்பவரை நியமித்தனர்.
அவர் பொறுப்பேற்ற பின், கணக்குகளை தணிக்கை செய்தார அப்போது, கோவில்களின் திருப்பணிக்காக வழங்கப்பட்ட, 86 லட்சம் ரூபாயை, பால்வண்ணன் கையாடல் செய்தது தெரிந்தது. மேலும், அதை அறியாத ஊர்மக்கள் புகார் அளிக்காததால், பால்வண்ணன் செய்த கையாடல் தெரியவில்லை.
இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவில் திருப்பணிகளுக்கு வழங்கிய பணத்தை கையாடல் செய்த பால்வண்ணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 'அதில், பால்வண்ணனை பிடித்து பணத்தை மீட்க, நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளோம்' என்றனர்.
ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது
இண்டூர்: தர்மபுரி அடுத்த ஆட்டுக்காரம்பட்டியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி வடிவேல், 40. இவர் ஆட்டுக்காரம்பட்டியில் புதிய வீடு கட்டி, பணி முடிந்த நிலையில், வீட்டின் மின் கட்டண டெரீப்பை மாற்றி தரக்கோரி, இண்டூர் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை அணுகினார். அப்போது,மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமார், 48, என்பவர், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் வடிவேல், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இதையடுத்து வடிவேலுவிடம், போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 15,000 ரூபாயை, மின்வாரியவருவாய் மேற்பார்வையாளர் சசிகுமார் பெற்றபோது, அவரை போலீசார் கைது செய்தனர்.
ரூ. 45 லட்சம் மோசடி இருவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் தனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்திருந்தார். வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்ததாக கூறியவருக்கு இணையதளம் மூலம் ரூ .45 லட்சம் அனுப்பினார். ஆனால் வேலை வரவில்லை. ஏமாற்றப்பட்டதால் திருநெல்வேலி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கர்நாடக மாநிலம் சுகாட்டாவில் இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அலுக்கோ ஒலுவா டோபி ஜோன்ஸ் 51, என்பவரையும் உத்தரகன்னடா ஹலியல் சதாசிவநகரை சேர்ந்த கல்லப்பா மால்வி 33 ,என்பவரையும் கைது செய்தனர்.
ரசாயன பவுடர் துாவி 6 பவுன் நகை கொள்ளை
நத்தம்; திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையன் பெண் மீது ரசாயன பவுடரை துாவி அவரை கட்டிப்போட்டு 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார்.
நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தை சேர்ந்தவர் வேன் டிரைவர் அழகுராஜா 35. இவரது மனைவிசுமதி 33. நேற்று சுமதி வீட்டில் தனியாக இருந்தார். மாலை 4:30 மணிக்கு வீட்டிற்குள் புகுந்தமுகமூடி கொள்ளையன் சுமதியை கட்டிப் போட்டு அவர் மீது ரசாயன பவுடரை துாவி அவர்அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின், 1பவுன் மோதிரத்தை கொள்ளையடித்து சென்றார். ரசாயன பவுடர் வீசியதில் முகம், வாயில் காயமடைந்த சுமதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.
விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டிய இருவர் கைது
குழந்தை கடத்தல் குறித்து விழிப்பாக இருக்கும்படி திருநெல்வேலியில் போஸ்டர் ஒட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக கூறி விழிப்புணர்வு என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. சிலர் வீடியோக்களை பகிர்ந்து குழந்தை கடத்தல் நடந்ததாக பதிவிடுகின்றனர்.
தூத்துக்குடியில் 6 மாத பெண் குழந்தை அண்மையில் கடத்தப்பட்டதை தவிர வேறு கடத்தல்சம்பவங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டியில்
பொதுமக்களுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் குழந்தைகளை கடத்துவதாகவும் இது குறித்து பெற்றோர் எச்சரிக்கையாக இருக்கும் படியும் போலீஸ் மற்றும் பொதுமக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டிய இமானுவேல் அந்தோணி 29, சுரேஷ் 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்
இந்திய நிகழ்வுகள்.
பிரதமர் மோடிக்கு மிரட்டல்: தமிழக அமைச்சர் மீது வழக்கு
பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறி, தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் மீது டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தி.மு.க.,வைச் சேர்ந்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில், ஊரக தொழில் துறை அமைச்சராக இருப்பவர், அன்பரசன்.
சமீபத்தில், சென்னையை அடுத்த பம்மலில் நடந்த தி.மு.க., நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை இதுவரை பார்த்ததே இல்லை. தி.மு.க.,வை அழித்து விடுவேன் என அவர் கூறியுள்ளார்.
'தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது. நான் அமைச்சர் என்பதால் கொஞ்சம் அடக்கிவாசிக்கிறேன். இல்லேன்னா பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்' என, பேசினார்.இதையடுத்து, பிரதமர்மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறி,அமைச்சர்அன்பரசன் மீது, ஐந்து பிரிவுகளின் கீழ், டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியின் நண்பர் கைது
பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கியகுற்றவாளியின் நெருங்கிய நண்பர், பல்லாரியில் நேற்று கைது செய்யப்பட்டார்.கர்நாடகாவின் பெங்களூரு, மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி குண்டு வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய குற்றவாளி, பஸ்சில் துமகூரு மார்க்கமாக பல்லாரி சென்றது, சிசிடிவி காட்சிகள் வாயிலாக உறுதியானது. என்.ஐ.ஏ., அதிகாரிகளும் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
குண்டு வெடிப்பில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் எனக் கருதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த நான்கு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பல்லாரி நகரின், கவுல் பஜார் புதிய பஸ் நிலையம்சாலையில் வசித்து வந்த ஷபீர், 32, என்பவரை, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கைது செய்தனர்.
இவர், குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஷபீருக்கும், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். ஷபீர், பல்லாரியின் தோரணகல் ஜிந்தால் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த தினத்தன்று, முக்கிய குற்றவாளியுடன் பலமுறை மொபைல்போனில் பேசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குண்டு வெடிப்புக்கு பின்,பல்லாரிக்கு வந்த முக்கிய குற்றவாளி, ஷபீரை சந்தித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது பெங்களூரில் ரகசிய இடத்தில் வைத்து ஷபீரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு குழு, பல்லாரியில் முகாமிட்டு விசாரிக்கிறது.

