சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: துயர சம்பவத்தில் 8 பேர் பலி
சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: துயர சம்பவத்தில் 8 பேர் பலி
ADDED : ஆக 11, 2025 09:01 PM

புனே: மஹாராஷ்டிராவில் மலைப்பாங்கான பகுதியில் சரக்கு வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாப்பல்வாடி கிராமத்தை சேர்ந்த 35 பேர், ஷ்ரவன் மாதத்தின் புனித நாளில், க்ஷேத்ரா மகாதேவ் குண்டேஷ்வர் கோயிலுக்கு சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். மலைப்பாங்கான பகுதியில் சென்ற போது திடீரென அவர்களின் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் வாகனத்தில் சென்ற பலர் உடல் நசுங்கினர்.சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த உள்ளூர்வாசிகள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். 10 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.
சம்பவம் தொடர்பாக பிம்ப்ரி சின்ச்வாட் போலீஸ் அதிகாரி வினோய் குமார் சவுபே கூறியதாவது:
பக்தர்களுடன் கோயிலுக்கு சென்ற சரக்கு வாகனம், இன்று அதிகாலை பள்ளத்தில் கவிழ்ந்தது. வாகனத்தில் பயணித்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 35 பயணிகள் இருந்தனர். இந்த சம்பவத்தில் 8 பெண்கள் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த துயர சம்பவம் குறித்து முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிவிட்டுள்ளதாவது:
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு தேவேந்திர பட்னவிஸ் பதிவிட்டுள்ளார்.
இரவு மற்றும் அதிகாலை நேரம் தூக்க கலக்கத்தில் வாகனம் இயக்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சற்றே அசந்தாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு விடும். எனவே அசம்பாவிதம் தவிர்க்க இரவு நேரம், அதிகாலையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.